ராஜபாளையம் அருகே, கிராம சபை கூட்டத்தை புறக்கணித்த பொதுமக்கள்!
ராஜபாளையம் அருகே, சொக்கநாதன் புதூரில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் முன்வைத்து பொதுமக்கள் கூட்டத்தை புறக்கணித்து, திடீரென வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழ்நாட்டில், இந்திய குடியரசு தினம், தொழிலாளர்கள் தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி, உலக நீர் தினம், உள்ளாட்சி தினம் ஆகிய ஆறு தினங்களில் கிராம சபை கூட்டம் கிராம ஊராட்சி மன்ற தலைவர்களால் கூட்டப்படுகிறது.
ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு இன்று கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி தலைமையில் நடைபெற்றது.
கிராமசபை கூட்டம் நடைபெறுவது குறித்து முறையான தகவல் அளிக்கவில்லை எனக் கூறி கூட்டத்தின் தொடக்கத்தில் ஊராட்சி செயலர் சீமானிடம் பொதுமக்கள் வாக்குவாதம்
செய்தனர். மேலும் ஒரே ஊராட்சியில் பல ஆண்டுகளாக ஊராட்சி செயலர் பணியாற்றி
வருவதாகவும் குற்றம் சாட்டினர்.
இதனைத்தொடர்ந்து, ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி பொறுப்பு ஏற்று 3 ஆண்டுகள் ஆகியும் இதுவரை குடிநீர் பிரச்னை சரி செய்யப்படவில்லை எனவும், அடிப்படை வசதிகள் போதுமான அளவு ஏற்படுத்தி தரவில்லை எனவும் ஊராட்சி தலைவரிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் ஊராட்சிக்கு ஒதுக்கப்படும் நிதியில், பல்வேறு மோசடி மற்றும் ஊழல்கள் செய்வதாகவும் குற்றம் சாட்டினர்.
இதுகுறித்து ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் கடல் கனி என்பவர் வெள்ளை தாளில் தான் செய்த திட்டங்கள் குறித்து எழுதி வந்ததை பொதுமக்கள் ஏற்றுக் கொள்ளாமல், கிராம
சபை கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.