தேசிய விண்வெளி தினம் 2024 - இஸ்ரோ தலைவர் சோமநாத் அழைப்பு!
ஆகஸ்ட் 23 தேசிய விண்வெளி தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், கொண்டாட்டங்களில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு இஸ்ரோ தலைவர் சோமநாத் அழைப்பு விடுத்துள்ளார்.
நிலவின் தென் துருவத்தில் தண்ணீர் இருப்பதை இஸ்ரோ கண்டுபிடித்த நிலையில், அதில் இறங்கி ஆய்வு செய்ய அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் கடுமையாக போட்டியிட்டன. ஆனால் சந்திரயான் 3 திட்டம் மூலம், நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய இஸ்ரோ திட்டமிட்டது. அந்த திட்டத்தை செயல்படுத்தும் வகையில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 14ம் தேதியன்று நிலவுக்கு சந்திரயான் 3 விண்கலத்தை இஸ்ரோ அனுப்பியது. இது பூமியை 6 முறை சுற்றி 41 நாட்கள் பயணத்திற்கு பின்னர் நிலவின் தென் துருவத்தில் இறங்கி வரலாற்று சாதனையை படைத்தது.
அதுவரை உலகின் எந்த ஒரு நாடும் நிலவின் தென் துருவத்தில் விண்கலனை தரையிறக்கியது கிடையாது. அப்படி இருக்கையில் சந்திரயான் வெற்றிகரமாக தரையிறங்கி ஆய்வை தொடங்கியது. அதுவரை இந்தியாவை வளர்ந்து வரும் நாடாக பார்த்த உலகம், இந்த வெற்றிக்கு பின்னர் அதன் பார்வையை மாற்றிக்கொண்டது. இந்தியாவுக்கு முன்னர் நிலவில் அமெரிக்கா, சீனா போன்ற நாடுகள் விண்கலத்தை அனுப்பி ஆய்வு செய்திருந்தாலும் இஸ்ரோவின் பிரிக்யான் ரோவர்தான் முதல் முதலில் நிலவில் சல்பர் இருப்பதை கண்டுபிடித்தது. இது இஸ்ரோ படைத்த இரண்டாவது சாதனை.
அதன்படி ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 23ஆம் தேதி தேசிய விண்வெளி தினமாக கொண்டாடப்பட திட்டமிடப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்த ஆண்டு தேசிய விண்வெளி தின கொண்டாட்டங்களில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு இஸ்ரோ தலைவர் சோமநாத் அழைப்பு விடுத்துள்ளார்.