பாஜகவிற்கு வழங்கிய ஆதரவை வாபஸ் பெற்றது தேசிய மக்கள் கட்சி... மணிப்பூரில் ஆட்சி மாற்றம்?
மணிப்பூரில் பாஜக அரசுக்கு அளித்துவந்த ஆதரவை திரும்பப் பெறுவதாக தேசிய மக்கள் கட்சியின் தலைவர் கன்ராட் கே. சங்மா அறிவித்துள்ளார்.
மணிப்பூர் மாநிலத்தில் கடந்த ஆண்டு முதல் வன்முறைகள் வெடித்து வருகிறது. குக்கி, மைதேயி சமூகங்களுக்கிடையேயான மோதலில் இதுவரை 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 70 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர். கடந்த சில நாட்களாக இந்த வன்முறை சம்பவங்கள் மிக மோசமாக அதிகரித்து வருகின்றது.
இந்த நிலையில் மணிப்பூரில் பாஜக அரசுக்கு அளித்துவந்த ஆதரவை திரும்பப் பெறுவதாக தேசிய மக்கள் கட்சி தெரிவித்துள்ளது. மணிப்பூரை ஆளும் பாஜக அரசு, வன்முறைகளைக் கட்டுப்படுத்த தவறிவிட்டதால் அந்த அரசுக்கான ஆதரவை 7 எம்.எல்.ஏக்களைக் கொண்ட தேசிய மக்கள் கட்சி இன்று வாபஸ் பெற்றுள்ளது.
மணிப்பூர் மாநில சட்டசபையில் மொத்தம் 60 இடங்கள் உள்ளன. பெரும்பான்மைக்கு தேவை 31 இடங்கள். 2022-ம் ஆண்டு மணிப்பூர் சட்டசபை தேர்தலில் 60 இடங்களில் போட்டியிட்ட பாஜக 32 இடங்களைக் கைப்பற்றியது. பாஜகவுக்கு 2 எம்எல்ஏக்களைக் கொண்ட குக்கி மக்கள் முன்னணி, 7 எம்எல்ஏக்களைக் கொண்ட தேசிய மக்கள் கட்சி, 6 எம்எல்ஏக்களைக் கொண்ட ஜேடியூ, 5 எம்எல்ஏக்களைக் கொண்ட என்பிஎப் ஆகியவை ஆதரவு தந்தன. பின்னர் ஜேடியூவின் 5 எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந்தனர்.
இதனிடையே மணிப்பூர் தொடர் வன்முறைகளால் 2 எம்எல்ஏக்களைக் கொண்ட குக்கி மக்கள் முன்னணி கடந்த ஆண்டு பாஜக அரசுக்கான ஆதரவை வாபஸ் பெற்றது. இதனைத் தொடர்ந்து தற்போது 7 எம்எல்ஏக்களைக் கொண்ட தேசிய மக்கள் கட்சியும் பாஜக அரசுக்கான ஆதரவை திரும்பப் பெற்றுள்ளது. பாஜகவுக்கு இந்த 9 எம்எல்ஏக்கள் ஆதரவு இல்லை என்றாலும் அக்கட்சியின் 37 எம்எல்ஏக்கள், ஜேடியூவின் 1எம்எல்ஏ, என்பிபிஎப்பின் 5 எம்எல்ஏக்கள் ஆதரவு இருக்கிறது. இதனால் மணிப்பூர் பாஜக அரசுக்கு எந்த ஒரு நெருக்கடியும் இல்லை.