தேசிய ஆடவர் ஹாக்கி சாம்பியன்ஷிப் தொடர் : அரையிறுதியில் தமிழ்நாடு அணி தோல்வி!
சென்னையில் நடைபெற்றுவரும் தேசிய ஆடவர் ஹாக்கி சாம்பியன்ஷிப்பில் தமிழ்நாடு அணி அரையிறுதியில் ‘ஷூட் அவுட்’ முறையில் ஹரியாணாவிடம் தோல்வியுற்றது.
13-வது தேசிய ஆடவர் ஆக்கி சாம்பியன்ஷிப் போட்டி தொடர் சென்னையில் கடந்த 17-ம் தேதி தொடங்கியது. சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில், மொத்தம் 8 பிரிவுகளாக 28 அணிகள் கலந்து கொள்ளும் நிலையில், போட்டியின் 11வது நாளான நேற்று அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன. அதில் தமிழ்நாடு அணி ஹரியாணா அணியை எதிர்கொண்டது. நிர்ணயிக்கப்பட்ட நேரத்தின் முடிவில் அந்த ஆட்டம் 1-1 கோல் கணக்கில் டிரா ஆனது.
முதலில் ஹரியாணாவுக்காக அபிஷேக் 41வது நிமிடத்திலும், பின்னர் தமிழ்நாடுக்காக சோமன்னா 60வது நிமிடத்திலும் ஒவ்வொரு புள்ளிகள் பெற்றனர். அடுத்து, வெற்றியாளரை தீர்மானிப்பதற்காக நடைபெற்ற ஷூட் அவுட் வாய்ப்பில் ஹரியாணா 4-2 கோல் கணக்கில் வென்றது. இதில் ஹரியாணாவுக்காக சஞ்சய், ரஜந்த், அபிஷேக், ஜோகிந்தா் சிங் ஆகியோர் கோலடிக்க, தமிழ்நாடு தரப்பில் மாரீஸ்வரன் சக்திவேல், சுந்தரபாண்டி ஆகிய இருவர் மட்டுமே புள்ளிகளை பெற்றிருந்தனர்.