தேசிய நல்லாசிரியர் விருது - தமிழ்நாட்டை சேர்ந்த இருவர் தேர்வு!
தமிழ்நாட்டில் வேலூரை சேர்ந்த கோபிநாத் மற்றும் மதுரையை சேர்ந்த முரளிதரன் ஆகிய இருவர் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வாகியுள்ளனர். இவர்களுக்கு செப். 5-ம் தேதி விருது வழங்கப்படவுள்ளது.
ஆசிரியராகப் பணியாற்றி, சுதந்திர இந்தியாவின் முதல் குடியரசுத் துணைத் தலைவராகவும், இரண்டாவது குடியரசுத் தலைவராகவும், பணியாற்றி மறைந்த ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 5-ம் தேதி ஆண்டுதோறும் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் சிறந்த ஆசிரியர்களுக்கு மத்திய அரசு சார்பில் தேசிய நல்லாசிரியர் விருதுகள் வழங்கி கவுரவிக்கப்படும். அதேபோல் தமிழ்நாட்டில் மாநில அளவில் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதும் வழங்கப்படுகிறது.
அதன்படி நடப்பாண்டு தேசிய நல்லாசிரியர் விருதுக்கு நாடு முழுவதும் உள்ள ஆசிரியர்களிடம் இருந்து கடந்த ஜூன் மாதம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதிலிருந்து தகுதியான 50 பேர் விருதுக்கு தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதன் விவரப் பட்டியலை மத்தியக்கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
அந்த வகையில், தமிழ்நாட்டில் ராஜகுப்பம் பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளி ஆசிரியர் கோபிநாத்துக்கும், மதுரை டிவிஎஸ் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த முரளிதரனுக்கும் நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வான ஆசிரியர்களுக்கு செப். 5-ம் தேதி டெல்லி விஞ்ஞான் பவனில் நடைபெற உள்ள ஆசிரியர் தினவிழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு விருது வழங்கி கவுரவிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், விருதுபெறும் நல்லாசிரியர்களுக்கு ரூ.50,000 ரொக்கப் பரிசு, வெள்ளிப்பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்படுகிறது.