நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம் - ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு!
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள நார்த்தாமலையில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்தாண்டுக்கான பங்குனி திருவிழா கடந்த மார்ச் 30 ம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. இதனையடுத்து கோயில் நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் முன்னிலையில் சிவாச்சாரியார்கள் கொடிமரத்தில் கொடியேற்றினர்.
தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்று காப்பு கட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதையடுத்து, தினமும் மாலை அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மேலும் மண்டகபடிதாரர்கள் சார்பில் தினமும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், இத்திருவிழாவில் மிக சிறப்பான நிகழ்வான தேரோட்டம் இன்று (ஏப்.8) கோலகலமாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
முன்னதாக அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் சகல அலங்காரத்துடன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அருணா தேரை வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்தார். இந்த பங்குனி தேரோட்ட இத்திருவிழாவை காண சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துக்கொண்டனர். புதுக்கோட்டை மாவட்டம் மட்டுமல்லாமல் திருச்சி, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் இருந்தும் இக்கோயிலுக்கு வருகை தந்தது குறிப்பிடத்தக்கது