"பேசாப் பொருளைப் பேச துணிந்திருக்கும் நந்தன்" - இயக்குநர் சரவணனுக்கு #CPIM தலைவர்கள் பாராட்டு!
நந்தன் திரைப்படம் பேசாப் பொருளைப் பேச துணிந்திருப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் பாராட்டு தெரிவித்தனர்
இயக்குநர் ரா.சரவணன் இயக்கத்தில் சசிக்குமார் நடிப்பில் உருவான திரைப்படம் நந்தன். இத்திரைப்படத்தில், பாலாஜி சக்திவேல், சமுத்திரகனி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார். இப்படம் கடந்த செப்.20-ம் தேதி வெளியான நிலையில், மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில், நந்தன் திரைப்படத்தை பார்த்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் அதன் இயக்குநர் சரவணனுக்கு நேரில் பாராட்டு தெரிவித்தனர். அக்கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தலைமையில் மூத்த தலைவர்கள் கனகராஜ், பி.சம்பத், சாமுவேல்ராஜ் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்
இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே கனகராஜ் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:
"நந்தன் திரைப்படம் தற்போது அமேசான் பிரைமில் வெளியாகி இருக்கிறது. திரையரங்குகளில் அப்படியொரு திரைப்படம் வந்து போனதே எனக்குத் தெரியவில்லை. முகநூல் பதிவு ஒன்றை பார்த்த பிறகு அதை பார்க்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொண்டேன். இந்த திரைப்படத்தை இயக்குநர் ரா. சரவணன் தயாரித்து இயக்கியிருக்கிறார். இதில் சசிகுமார் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். இயக்குநர் பாலாஜி சக்திவேல் மிக முக்கியமான பாத்திரத்தில் நடித்திருக்கிறார். சமுத்திரக்கனியையும் சேர்த்து நான்கு இயக்குநர்கள் இந்தப் படத்தில் இணைந்திருக்கிறார்கள்.
சசிகுமாரின் மனைவியாக வரும் திரைக்கலைஞரின் நடிப்பும் மெச்சத்தக்க வகையில் இருக்கிறது. ஊர் மக்களாக வந்திருப்பவர்கள் ஏதோ ஒரு ஊரில் குடிமக்களாக இருக்க வேண்டும்.
சசிகுமார் நடிப்பின் உச்சத்தைத் தொட்டிருக்கிறார். அதேபோன்று, பாலாஜி சக்திவேல் சாதி ஆதிக்கத்தின் முழுமையான வடிவத்தை கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார். அவருடைய பேச்சுக்களும் கூட உடல்மொழியும் முகபாவணைகளும் ஆதிக்கத்திற்கு ஒடுக்கப்பட்டோர் மீதான வெறுப்பு, கோபம், அறுவறுப்பு அதேசமயம் தந்திரமான நடவடிக்கைகள் அனைத்தையும் ஒருசேர நம்மிடம் கடத்துகிறது.
சசிகுமாரின் மனைவியாக வருபவர் ஒடுக்குமுறையை எதிர்க்கிற அதேசமயம் கையறு நிலையில் கணவனையும், மகனையும் வெளுத்து வாங்குகிறவராக அற்புதமாக நடித்திருக்கிறார். சசிகுமாருக்கு வணிக ரீதியாக வெற்றிபெற்ற பல திரைப்படங்கள் இருந்தாலும் நிச்சயமாக அவருடைய நடிப்புக்காக அவருக்கு புகழைச் சேர்க்கும் திரைப்படங்களில் முதன்மையானதாக இது இருக்கும்.
கிராம பஞ்சாயத்தில் ஆதிக்கம் செலுத்துவதும் அது தனித்தொகுதியாக மாற்றப்பட்ட பிறகு அந்த ஆதிக்கத்தை தக்க வைத்துக் கொள்வதற்காக விசுவாசமான புழுவிலும் கீழாக தன்னிடம் பணியாற்றும் ஒருவரை கொண்டு வர முயற்சிப்பதும் அதன் விளைவாக புழுவிற்கு கூட எப்படி கோபம் வருகிறது என்பதும் கதை. அந்தப் புழுவின் பாத்திரத்தோடு தோய்ந்துவிட்டார் சசிக்குமார். சமுத்திரக்கணியின் பாத்திரம் பெரும்பாலும் சினிமாவில் மட்டுமே சாத்தியமான பாத்திரம். பல இடங்களில் கொஞ்சம் சினிமாத்தனம் தூக்கலாக இருக்கிறது. ஆனால், அவை அவசியம் என்றே எனக்கு பட்டது.
இதில் கதை என்று எதுவும் கிடையாது. ஒரு பாப்பா பட்டி, ஒரு கீரிப்பட்டி, ஒரு நாட்டார்மங்கலம், ஒரு கொட்டக்கச்சியேந்தல், ஒரு மேலவளவு என்று தமிழகத்தின் நூற்றுக்கணக்கான கிராமங்களில் இன்றளவும் நிலவும் சாதி ஆதிக்கத்தின் ஒரு சின்ன ஆனால் முக்கியமான பிரச்னையை தொட்டுக்காட்டுகிறது திரைப்படம். படம் முடிந்த பிறகு இன்னும் முற்றுப்பெறவில்லை என்பதை சசிகுமார் உணர்த்துகிறார். தன்னோடு நம்மையும் இணைய அழைக்கிறார். படத்தில் தான் இப்படியெல்லாம் வெற்றி பெற முடியும் என்று கூறிய பிறகு நடப்பில் எப்படி இருக்கிறது என்பதை தற்போது கிராம ஊராட்சி தலைவராக இருக்கும் பலரின் பேட்டிகள் இடம்பெற்றிருக்கிறது.
அதுவரையிலும் அம்பேத்குமார் வெற்றிபெற வேண்டும். வெற்றி பெற்றுவிட்டார் என்று திரைப்படத்திற்குள் மூழ்கியிருக்கும் பார்வையாளர்களை எதார்த்தத்திற்கு இழுத்து வருகிறது. சிலருக்கு படத்தின் அந்தப்பகுதி ஒரு ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கும். ஆனால், வணிக வெற்றியை மட்டும் பற்றி கவலைப்படாமல் சமூக அவலத்தையும் உணர வேண்டும் என்பதற்காக முயற்சிப்போரின் இத்தகைய முடிவுகள் பார்வையாளருக்கு ஏமாற்றத்தை தரலாம்.
ஆனால், அந்த ஏமாற்றம் நியாயமானது. இத்தகைய படங்கள் கொண்டாடப்பட வேண்டும். பாராட்டப்பட வேண்டும். தமிழ்ச்சமூகத்தில் பிரம்மாண்ட படங்களுக்கு இடையில் ஒரு முக்கியமான பொருளை பேசத் துணிந்திருக்கும் இயக்குநருக்கும் தயாரிப்பாளருக்கும் கலைஞர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுகள். ஆரத்தழுவிக்கொள்கிறேன் கலைஞர்களே.
அனைவரும் பாருங்கள். பார்க்கத் தூண்டுங்கள். நந்தன் பேசத்துணிந்ததை அனைவரும் பேசுவோம்."
இவ்வாறு அந்தப் பதிவில் கே கனகராஜ் குறிப்பிட்டுள்ளார்.