Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#Nandhan - சாதிய இழிவு தீண்டாமை குப்பைகளை எரிக்கும் புரட்சி தீக்குச்சி! சீமான் புகழாரம்!

12:30 PM Sep 20, 2024 IST | Web Editor
Advertisement

நந்தன் - சாதிய இழிவு தீண்டாமை குப்பைகளை எரிக்கும் புரட்சி தீக்குச்சி என திரைப்பட இயக்குநரும், நடிகரும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான ‘ சீமான் பாராட்டியுள்ளார்.

Advertisement

தமிழ் சினிமாவில் மினிமம் கியாரண்டி நடிகராக இருந்த சசிகுமார் கடந்த சில வருடங்களாக தொடர்ந்து தோல்விப் படங்களாகக் கொடுத்துக் கொண்டிருந்தார். அதற்கு அவர் தேர்வு செய்த கதைகளே காரணம் என சொல்லப்பட்டது. இதனால் ஒரு கட்டத்தில் அவர் படங்கள் படுதோல்வி அடைந்த நிலையில் அயோத்தி என்ற படத்தின் மூலம் மீண்டும் நம்பிக்கைக் கொடுக்கும் நடிகராக மாறியுள்ளார்.

இதையடுத்து அவர் இப்போது உடன்பிறப்பே இயக்குனர் இரா சரவணன் இயக்கத்தில் 'நந்தன்' என்ற அழுத்தமானக் கதைக்களம் கொண்ட படத்தில் நடித்துள்ளார். இந்த படம் இன்று ரிலீஸ் ஆனது. ரிலீஸுக்கு முன்பே இந்த படம் நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் படத்தைப் பார்த்த சீமான் படத்தைப் பாராட்டியுள்ளார்.

 இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக அணையாமல் சுட்டெரிக்கும் சாதிய நெருப்புக்குப் பலியான நந்தனின் மீளெழுச்சியையும், தமிழ்ச்சமூகத்திற்குத் தேவையான ஓர்மையுணர்ச்சியையும் பதிவுசெய்யும் ஆகப்பெரும் படைப்புதான் நந்தன்!

தனது வாழ்நாள் முழுமைக்கும் சாதிய ஒடுக்குமுறைகளுக்கும், ஆதிக்கவுணர்வுகளுக்கும் எதிராகப் போராடியப் பேராசான் அண்ணல் அம்பேத்கர் அவர்கள், "அனைத்து துன்பப் பூட்டுகளுக்குமான திறவுகோல் ஆட்சி அதிகாரம் மட்டும்தான்!" என்கிறார். அவர் போதித்து 70 ஆண்டுகளைக் கடந்தும் விளிம்பு நிலை மக்களுக்கான அதிகாரமும், சாதிய பாகுபாடற்ற சமூக விடுதலையும் கிடைக்கப் பெறாத தற்காலச்சூழலில், "நாங்கள் ஆள்வதற்கல்ல; இங்கே வாழ்வதற்கே அதிகாரம் தேவை!” என்று அடித்தட்டு மக்களின் உள்ளத்து உணர்வாய் உரத்து முழங்குகிற சமூக நீதிக்குரல்தான் நந்தன்!

"சாதி தான் சமூகமென்றால், வீசும் காற்றே நஞ்சாக மாறட்டும்!" எனும் கவிஞர் தம்பி பழநிபாரதியின் அறச்சீற்றம் மிகுந்த மொழியே, ஒடுக்கப்பட்ட ஆதித்தொல்குடிமக்களின் ஆற்றவியலா வலியைக் கூறும். அதனைத் திரைமொழியில் வடித்திருக்கின்ற பெருங்காவியம்தான் நந்தன்!

ரத்தம், சதை, எலும்பு, நரம்பு, பசி, உறக்கம், கனவு, கண்ணீர் என எல்லாம் கொண்ட சக மனிதனைப் பிறப்பை அடிப்படையாகக் கொண்டு தாழ்த்தும் கொடுமையைத் தோலுரித்து, மண்ணின் மக்களின் வலியைப் பதிவு செய்யும் திரை ஆவணம்தான் நந்தன்!

பிறப்பின் அடிப்படையில் பேதம் கற்பிக்கும் வருணாச்சிரமக் கோட்பாடு விளைவித்திட்ட சாதியக் கட்டுமானத்தினால் மண்ணுக்குள் புதைந்திட்ட மானுடத்தைப் பேசும் படம்தான் நந்தன்!

இது பொழுதைப் போக்குவதற்கான திரைப்படம் அல்ல; பொழுதை ஆக்குவதற்கான படம், நாம் வாழும் சமூகத்தின் பழுதை நீக்கி, சமூக மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் புரட்சிக்காவியம்தான் நந்தன்!

ஏழை, பணக்காரன் எனும் வர்க்கம் மாறும்; ஆனால், வர்ணம் மாறாது. பிறப்பின் வழியே சுமத்தப்பட்ட இழிசொல் மாறாது. அதன் வலியைத் துளியும் மாறாது திரைமொழியில் கொண்டு வந்து, சாதிய எண்ணம் கொண்டோரையும் குற்றவுணர்ச்சிக்குள் தள்ளி, மானுடராய் மீட்டெடுக்கும் பெரும்பணியைச் செய்யவல்ல சமூகப்பொறுப்புணர்வுமிக்கத் திரைக்காவியமாய் நந்தன் எனும் இத்திரைப்படத்தை எழுதி, இயக்கி, தயாரித்துள்ள என்னுடைய அன்பு இளவல் இரா.சரவணன் அவர்களை எண்ணிப் பெருமிதம் கொள்கிறேன்; உள்ளன்போடு உச்சிமுகர்ந்து பாராட்டுகிறேன்.

இத்திரைப்படத்தின் முதன்மைப்பாத்திரத்தை ஏற்று நடித்திருக்கும் அன்புத்தம்பி சசிகுமார் அவர்கள் பல திரைப்படங்களில் தனது இயல்பான நடிப்பால் முத்திரைப் பதித்து, மக்கள் மனங்களை வென்றிருந்தாலும் இத்திரைப்படம் அவரது திரைவாழ்வின் பெரும் பாய்ச்சல். ‘அயோத்தி’ திரைப்படத்தில் மதநல்லிணக்கத்தை வலியுறுத்தும் கதாபாத்திரத்தில் நடித்திருந்த தம்பி சசிகுமார், இத்திரைப்படத்தில் சாதியத்தின் கொடுமைகளைக் காட்டி சமூக விடுதலையைக் கோரும் மகத்தானப் படைப்பில் தன்னை முழுவதுமாகப் பொருத்திக் கொண்டிருக்கிறார். வழமையான தோற்றம், உடல் மொழி, நடை, உரையாடல் உச்சரிப்பு என அனைத்தையும் மொத்தமாக மாற்றி, வேறு ஒர் ஆளாக முற்றிலும் மாறி, கதாபாத்திரமாகவே வாழ்ந்து, திரைப்படத்திற்கு உயிரூட்டியிருக்கின்ற தம்பி சசிகுமாரின் நடிப்பை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

தான் ஏற்ற கதாபாத்திரத்தை உள்வாங்கி உணர்வுப்பூர்வமான உரையாடல்களைப் பேசி மக்கள் மனதில் நிற்கும்படியான நெகிழ்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் தம்பி சமுத்திரக்கனி. மிகச்சிறப்பான நடிப்பினால் தம்பி பாலாஜி சக்திவேல் அவர்கள் படம் முழுவதையும் தாங்கி நிற்கிறார். பாசமாய்ப் பார்த்து பார்த்துப் பழகிய தம்பியாக இருந்தாலும் திரையில் பார்த்ததும் கோபம் வரும் அளவிற்கு எதிர்மறை கதாப்பாத்திரமாகவே ஒன்றி நடித்திருக்கிறார் பாலாஜி சக்திவேல். படத்தின் நாயகி பாத்திரத்தை ஏற்றிருக்கும் தங்கை சுருதி பெரியசாமி அவர்கள் அறிமுகத் திரைப்படமெனக் கூறமுடியாத அளவுக்கு, சிறப்பானதொரு நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

சற்றும் மிகை இல்லாத காட்சியமைப்புகள், மக்கள் மொழியில் அமைக்கப்பட்ட உரையாடல்கள், மிக இயல்பான முகங்களாக வரும் கதாபாத்திரங்கள் எனப் படத்தில் வரும் மனிதர்களின் வாழ்க்கையோடு நம்மை ஒன்றச் செய்யும் தம்பி இரா.சரவணன் அவர்களது படைப்பாற்றல் படத்திற்குப் பலம்சேர்க்கிறது.

தம்பி சரணின் ஒளிப்பதிவும், தம்பி நெல்சன் ஆண்டனியின் படத்தொகுப்பும், தம்பி ஜிப்ரானின் பாடல்களும், பின்னணி இசையும் திரைக்கதையோடு இணைந்து பயணித்துப் பார்ப்பவர்களுக்குப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இவர்களோடு, பாடல்களை எழுதிய தம்பி கவிஞர் இரவி, கலை இயக்குநர் உதயகுமார் உள்ளிட்ட தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் திரைக்கலைஞர்கள் என அனைவருக்கும் என்னுடைய அன்பும், வாழ்த்துகளும்!

மக்களின் பாடுகளைத் திரையில் பதிவுசெய்யும் இத்திரைப்படத்தை வெளியிட முன்வந்த TRIDENT ARTS தம்பி இரவீந்திரன் அவர்களுக்குத் தனிப்பட்ட முறையில் என்னுடைய அன்பையும், நன்றியையும் தெரிவிக்கிறேன்.

என் உயிருக்கினிய தம்பிகள் இணைந்து, ஒரு புரட்சிக்காவியத்தைப் படைத்துள்ளார்கள் என்பது பெரும் மகிழ்வையும், பெருமித உணர்வையும் தருகிறது.

சமூக மாற்றத்தை விதைக்கும் புரட்சிகரமான கருத்துகளைக் கொண்டுள்ள இத்திரைப்படத்தை ஒவ்வொருவரும் பார்க்க வேண்டும். இதனை வணிகரீதியாக வெற்றியடையச் செய்து, தரமான திரைப்படங்களை மக்கள் வெற்றியடையச் செய்வார்கள் எனும் நம்பிக்கையை நாளைய படைப்பாளிகளிடையே விதைக்க வேண்டும். ஆகவே, படம் சொல்லும் கனமான கருத்தின் தாக்கம் கடைக்கோடி மனிதனுக்கும் சென்று சேரும் வகையில் நந்தன் மிகப்பெரிய வெற்றியடைய வேண்டுமென உளமார வாழ்த்துகிறேன்!

தமிழ்ச்சமூக மக்கள் இத்திரைப்படத்தினைத் திரையரங்கில் கண்டு மாபெரும் வெற்றிப்படைப்பாக்க வேண்டுமென உரிமையோடு கோருகிறேன்!

நந்தன் வீழ்த்தப்பட்டவனல்ல;
தமிழ்ச்சமூக மக்களால் வாழ்த்தப்பட்டவன்!

அன்று நந்தனை எரித்த நெருப்பு;
இனி புரட்சித்தீயாய் சுடர்விடும்!

நந்தன்!
தமிழ் மக்களின் மனக்கோவிலுக்குள் நுழையட்டும்!
தமிழர்களிடையே ஒற்றுமையுணர்வை ஊட்டி வளர்க்கட்டும்!

சாதிகள் இல்லையடி பாப்பா!-குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்;
நீதி உயர்ந்த மதி,கல்வி-அன்பு
நிறை உடையவர்கள் மேலோர்.

Tags :
NandhanNTKSasi KumarSeeman
Advertisement
Next Article