'தகைசால் தமிழர்' சங்கரய்யாவுக்கு பிரியாவிடை; கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தும் பொதுமக்கள்...
சென்னை பெசன்ட் நகரில் உள்ள மின்மயானத்திற்கு கம்யூனிஸ்ட் கட்சியினரின் பேரணியுடன் சங்கரய்யாவின் உடல் கொண்டு செல்லப்படுகிறது.
சுதந்திரப் போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான தோழர் சங்கரய்யா நேற்று காலை சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் உடல்நிலை குறைவு காரணமாக உயிரிழந்தார்.
அவரது உடல் குரோம்பேட்டையில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர் தியாகராய நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திற்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக சங்கரய்யா உடல் வைக்கப்பட்டது. மார்க்ச்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து, சங்கரய்யாவின் உடலுக்கு நக்கீரன் கோபால், நடிகை சி ஆர் சரஸ்வதி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, நடிகர் சத்யராஜ், அமைச்சர் மா சுப்பிரமணியன், நடிகர் பார்த்திபன், நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி ஆர் பாலு, காங்கிரஸ் எம்எல்ஏ ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உள்ளிட்ட தலைவர்கள் காலை முதல் அஞ்சலி செலுத்தினர்.
காலை 10 மணியளவில் சென்னை பெசன்ட் நகரில் உள்ள மின்மயனத்திற்கு கம்யூனிஸ்ட் கட்சியினரின் பேரணியுடன் சங்கரய்யாவின் உடல் கொண்டு செல்லப்பட்டது.
உறவினர்கள் பொதுமக்கள் என அஞ்சலி செலுத்த வந்த அனைவரும் கண்ணீர் மல்க அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.
பேரணியுடன் சங்கரய்யாவின் உடல் கொண்டு செல்லப்படும் நிலையில், பெசன்ட் நகர் மின்மயனத்தில் சங்கரய்யாவின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட உள்ளது.