சுவாமிமலையில் முருகர் - வள்ளி திருக்கல்யாணம்... சீர்வரிசையோடு குவிந்த பக்தர்கள்!
முருக பெருமானின் அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடாக விளங்குவது கும்பகோணம் அருகில் உள்ள சுவாமிமலை சுவாமிநாத சுவாமி ஆலயமாகும் .
இந்த ஆலயத்தில் நடைபெறும் முக்கிய விழாக்களில் ஒன்று பங்குனி உத்திர
திருவிழா. பங்குனி உத்திரத் திருவிழா நேற்றுமுன் தினம் துவங்கியது. இவ்விழாவின் முக்கிய நிகழ்வான வள்ளி திருக்கல்யாணம் நேற்று இரவு வெகு விமரிசையாக நடைபெற்றது.
திருக்கல்யாணத்தின் ஒரு பகுதியாக ஆறுமுகக் கடவுள் மற்றும் வள்ளி ஆகியோர் மாலை மாற்றும் சம்பிரதாய சடங்கு நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து வள்ளி திருக்கல்யாணம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
முன்னதாக கும்பகோணம் மற்றும் சுவாமிமலையை சுற்றி வசிக்கும் வள்ளி இனமக்கள் நூற்றுக்கணக்கானோர் பல்வேறு வகையான பழங்களுடன் சீர்வரிசை எடுத்து வந்தனர். முருகக்கடவுள் - வள்ளி திருக்கல்யாணத்தை முன்னிட்டு சுவாமிமலை மூலவர் சுவாமிநாத சுவாமி ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.