#Mumbai | இண்டிகோ விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு: 5 மணிநேரம் உணவு, தண்ணீரில்லாமல் பயணிகள் அவதி!
மும்பையில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்ட விமானத்தில் உணவு, தண்ணீர்கூட வழங்காததால் பயணியர்கள் அவதியுற்றுள்ளனர்.
மும்பையிலிருந்து கத்தார் செல்லவிருந்த இண்டிகோ விமானத்தில் இன்று (செப். 15) அதிகாலையில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதனையடுத்து, விமானம் தாமதமாகவே புறப்பட்டது. இதற்கிடையில், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, பயணிகள் அனைவரும் சுமார் 5 மணிநேரமாக விமானத்திற்குள்ளாகவே காத்திருந்த நிலை ஏற்பட்டது. அவர்களுக்கு உணவோ அல்லது தண்ணீர்கூட அளிக்கவில்லை என்று குற்றம் சாட்டினர்.
அதிகாலை 3:55 மணிக்கு புறப்படவிருந்த விமானத்தில் இருந்து இறங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டதாகவும், விமானத்தில் சில “தொழில்நுட்ப சிக்கல்கள்” காரணமாக மும்பை விமான நிலையத்தில் உள்ள குடியேற்ற காத்திருப்பு பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் பயணிகள் கூறினர்.
இறுதியாக, பயணியர்களின் விரக்தி வெளிப்பட்ட பின்புதான், அவர்களை விமான நிலையத்தின் காத்திருப்பு பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இதுகுறித்து, விமான நிலைய அதிகாரிகளிடம் கூறியபோதும், அவர்கள் முறையாக பதிலளிக்கவில்லை என்று பயணியர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
டெல்லி-தர்பங்கா வழித்தடத்தில் பறக்கும் பயணிகள் சிலர், கடந்த சில மாதங்களாக இந்த வழித்தடத்தில் விமானங்களை அடிக்கடி ரத்து செய்து வருவதாக குற்றம் சாட்டியுள்ளனர். இந்த விவகாரம் குறித்து விமான நிறுவனம் இன்னும் அறிக்கை வெளியிடவில்லை.