சொந்த மண்ணில் வீழ்ந்தது மும்பை - 24 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா வெற்றி!
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 24 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றி பெற்றது.
ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியுடன் ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மோதியது.
இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய கொல்கத்தா அணி, அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. சொற்ப ரன்களில் ஒருவர் பின் ஒருவராக கொல்கத்தா அணி வீரர்கள் ஆட்டமிழந்தனர்.
இதையும் படியுங்கள் : மஞ்சுமெல் பாய்ஸ் முதல் சைத்தான் வரை … இந்த வாரம் ஓடிடியில் ரிலீஸாகும் திரைப்படங்கள்!
இதையடுத்து 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங் செய்ய மும்பை இந்தியன்ஸ் அணி களமிறங்கியது. கொல்கத்தா அணியை போலவே மும்பை அணியும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தது. சூர்யகுமார் யாதவ் 56 ரன்கள் விளாசி வெளியேறினார். மும்பை அணியின் மற்ற வீரர்கள் ரன்களைக் குவிக்க முடியாமல் வெளியேற, 18.5 ஓவர்களில் 145 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மும்பை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. மிட்செல் ஸ்டார்க் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.