7 விக்கெட் வித்தியாசத்தில் ஹைதராபாத்தை வீழ்த்தியது மும்பை அணி!
ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில், 7 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்றது.
2024 ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் 22 ஆம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் தொடங்கி பல்வேறு மைதானங்களில் நடைபெற்று வருகிறது. இதுவரை 54 லீக் போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ளன. இந்நிலையில் மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற 55வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதிக்கொண்டன.
இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. ஹைதராபாத் அணியின் இன்னிங்ஸை டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா தொடங்கினர். பவர்ப்ளே முடிவில் ஹைதராபாத் அணி ஒரு விக்கெட்டினை இழந்து 56 ரன்கள் சேர்த்தது. தொடர்ந்து, 6 பந்துகளில் 5 ரன்கள் மட்டுமே எடுத்து விக்கெட்டை மயங் அகர்வால் பறிகொடுத்தார்.
அதிரடியாக விளையாடிய ட்ராவிஸ் ஹெட் 48 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். நிதிஷ் ரெட்டி 20 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். ஹென்ரிச் கிளாசென் 2 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். ஷாபாஸ் அகமது தனது விக்கெட்டினை 16வது ஓவரின் முதல் பந்திலும் மார்கோ யான்சென் 5வது பந்திலும் தங்களது விக்கெட்டினை இழந்து வெளியேறினர். இவர்களது விக்கெட்டினை ஹர்திக் பாண்டியா கைப்பற்றினார்.
18 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 148 ரன்கள் சேர்த்தது. இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 173 ரன்கள் எடுத்தது. பேட் கம்மின்ஸ் மற்றும் சன்விர் சிங் தங்களது விக்கெட்டை இழக்காமல் இருந்தனர். எனவே மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 174 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி களமிறங்கியது. அந்த அணியில் ரோகித் சர்மா 4 ரன்களிலும், இஷான் கிஷன் 9 ரன்களிலும் அவுட் ஆகினர். அதனையடுத்து களமிறங்கிய நமன், ரன் எதுவும் எடுக்காமல் அவுட்டானார். பின்னர் சூர்யகுமார் யாதவ் மற்றும் திலக் வர்மா ஆகியோர் ஜோடி சேர்ந்து ரன்களை குவித்தனர். சூர்யகுமார் யாதவ் சதம் அடித்தார்.
முடிவில் மும்பை 17.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் மும்பை அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. மும்பை தரப்பில் அதிகபட்சமாக அதிரடியாக விளையாடிய சூர்யகுமார் யாதவ் 102 ரன்களும் திலக் வர்மா 37 ரன்களும் எடுத்தனர். ஹைதராபாத் தரப்பில் புவனேஷ்வர் குமார், கம்மின்ஸ் மற்றும் மார்கோ ஜான்சன் ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர்.