ஐபிஎல் 2024 இன்றைய போட்டியில் பஞ்சாப் அணிக்கு 168 ரன்கள் இலக்காக நிர்ணயித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) 2 லீக் ஆட்டங்கள் அரங்கேறுகிறது. இதில் தர்மசாலாவில் உள்ள இமாசலபிரதேச கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் மாலை 3.30 மணிக்கு தொடங்கும் 53-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ்-சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மீண்டும் பலப்பரீட்சை நடத்துகின்றன. பஞ்சாப் அணியின் 2-வது உள்ளூர் மைதானமான தர்மசாலாவில் நடப்பு தொடரில் நடைபெறும் முதல் ஆட்டம் இதுவாகும்.
பஞ்சாப் கணிக்க முடியாத அணியாக விளங்குகிறது. அந்த அணி இதுவரை 10 ஆட்டங்களில் ஆடி 4 வெற்றி, 6 தோல்வியுடன் 8 புள்ளி பெற்றுள்ளது. முந்தைய 2 ஆட்டங்களில் கொல்கத்தா, சென்னை அணிகளை அதன் சொந்த மண்ணில் அடுத்தடுத்து முறையே 8 விக்கெட், 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வீழ்த்தியது. கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் 262 ரன் இலக்கை விரட்டிப்பிடித்து புதிய வரலாறு படைத்தது. அந்த அணி அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்க தனது எஞ்சிய 4 ஆட்டங்களிலும் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
இந்த நிலையில் இன்றைய போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனைத் தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங்கில் களமிறங்கியது. முதல் வீரர்களாக அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ரஹானே களமிறங்கினர். ரஹானே சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார்.
ருதுராஜ் கெய்க்வாட்டுடன் கைகோர்த்த டேரில் மிட்செல் அதிரடியாக விளையாடி அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர். இதனைத் தொடர்ந்து மிட்செல் 30 ரன்களுக்கும், கெய்க்வாட் 32 ரன்களுக்கும் ஆட்டமிழந்து வெளியேறினார். இதனைத் தொடர்ந்து களமிறங்கிய சிவம் துபே டக் அவுட் ஆகி அதிர்ச்சியை கொடுத்தார்.
இதனைத் தொடர்ந்து களமிறங்கிய மொயீன் அலி மற்றும் ஜடேஜா ஆகியோர் நிதானமாக விளையாடி ரன்களை அதிகப்படுத்திக் கொண்டிருந்தபோது மொயீன் அலி கேட்ச் கொடுத்து வெளியேறினார். ஷர்துல் தாகூர், சாண்ட்னர் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட எம்.எஸ்.தோனி டக் அவுட் ஆகி வெளியேறினார். 20 ஓவர்களின் முடிவில் 9விக்கெட்களை இழந்து சிஎஸ்கே அணி 167 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 26பந்துகளில் 43 ரன்கள் எடுத்தார். பஞ்சாப் அணி சார்பில் ராஹுல் சாஹர் மற்றும் ஹர்ஷல் படேல் ஆகியோர் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர். பஞ்சாப் அணிக்கு 168ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.