ஐசிசியின் 'ஹால் ஆப் பேம்' பட்டியலில் இடம்பெற்றார் எம்.எஸ் தோனி!
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (I.C.C. - ஐசிசி) சார்பில் கிரிக்கெட்டில் சிறந்து விளங்குவோரை மதிப்புமிக்க வீரராக கருதி ஹால் ஆஃப் ஃபேம் (Hall of Fame) பட்டியலில் கௌரவிக்கப்படும். இந்த கௌரவமிக்க பட்டியலில் புதிதாக 7 வீரர்களை சேர்த்து ஐசிசி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி இடம்பெற்றுள்ளார்.
மேலும், ஆஸ்திரேலியாவின் முன்னாள் தொடக்க வீரர் மேத்யூ ஹைடன், சவுத் ஆப்பிரிக்காவின் ஹாசிம் ஆம்லா, கிரேம் ஸ்மித் மற்றும் நியூசிலாந்தின் டேனியல் வெட்டோரி ஆகியோரும் சேர்கப்பட்டுள்ளனர். அதனுடன், பாகிஸ்தான் வீராங்கனை சனா மிர் மற்றும் இங்கிலாந்தின் சாரா டெய்லர் ஆகியோரும் இந்த பட்டியலில் இணைந்துள்ளனர்.
இதன்மூலம், ஐசிசி ஹால் ஆப் பேமில் இடம் பெற்ற முதல் பாகிஸ்தான் வீராங்கனை என்ற பெருமையை சனா மிர் பெற்றுள்ளார். இந்திய வீரர்களான பிஷன்சிங் பெடி, கவாஸ்கர், கபில்தேவ், கும்ப்ளே , ராகுல் டிராவிட் உள்ளிட்டோர் ஏற்கனவே இந்த கெளரவத்தை பெற்றுள்ளனர். அந்த வகையில், எம்.எஸ்.தோனி 11வது இந்திய வீரராக இதில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்த பட்டியலில் தோனி இடம்பெற்றது தொடர்பாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியம் (BCCI) எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது,
“தோனி 2007 ஐசிசி உலக டி20 வென்ற கேப்டன், 2011இல் ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை வென்ற கேப்டன், 2013 இல் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி வென்ற கேப்டன் ஆவார். 2009ஆம் ஆண்டு ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்தியாவை முதல் இடத்திற்கு அழைத்துச் சென்றவர். சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் ஹால் ஆஃப் ஃபேமில் சேர்க்கப்பட்டதற்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனிக்கு வாழ்த்துக்கள். புகழ்பெற்றவர்களின் பட்டியலில் இணையும் 11வது இந்திய கிரிக்கெட் வீரர் தோனி ஆவார்”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.