திரை விமர்சனம்: ‘இந்திரா’ மற்றும் ‘கேப்டன் பிரபாகரன்’ - இந்த வாரம் வெளியான படங்கள் எப்படி? ஒரு மினி ரிவ்யூ!
இந்த வாரம் ஆகஸ்ட் 22ல் வசந்த் ரவி நடித்த ‘இந்திரா’, ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில் விஜயகாந்த் நடித்த கேப்டன் பிரபாகரன்(ரீ ரிலீஸ்) ஆகிய 2 படங்கள் வெளியாகி உள்ளன.இந்த படங்களின் கதை எப்படி? நடித்தவர்களின் நடிப்பு எப்படி? படத்தில் சுவாரஸ்யம் இருக்குதா? இதோ மினி ரிவியூ
இந்திரா
**
தனது மனைவியை கொன்ற கொலைகாரனை கண்டுபிடிக்கும் ஹீரோவின் கதை இந்திரா என சிம்பிளாக சொன்னாலும், அதில் நிறைய சஸ்பென்ஸ் வைத்து கதையை நகர்த்தி இருக்கிறார் இயக்குனர் சபரீஷ் நந்தா. காரணம், ஹீரோவாக நடித்து இருக்கும் வசந்த்ரவி சஸ்பெண்ட் செய்யப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர். ஒரு விபத்தால் பார்வையை இழந்தவர். அந்த சமயத்தில் ஹீரோ வீட்டுக்குள் நள்ளிரவில் புகுந்த கொலையாளி அவர் மனைவியை கொல்கிறார். இத்தனைக்கும் வீடு பூட்டி இருக்கிறது. இன்னொரு ரூமில் ஹீரோ துாங்கிக்கொண்டு இருக்கிறார். இப்படிப்பட்ட சூழ்நிலையில் வீட்டுக்குள் அந்த கொலையாளி வந்தது எப்படி? ஹீரோயினை அவன் கொல்ல காரணம் என்ன? எப்படி அவனை கண்டுபிடிக்கிறார் ஹீரோ. அடுத்து என்ன செய்கிறார் இதுதான் இந்திரா படக்கதை
சஸ்பெஸ்ஸ் திரில்லர், சீரியல் கொலைகள், காதல், கோபம், பழிவாங்கல் என பல தளங்களில் இந்திரா கதை நடக்கிறது. ஹீரோ கேரக்டர் பெயர் இந்திரா என்பதால் இந்த தலைப்பு. வேலை போன தவிப்பில் இருக்கும் ஹீரோ, மனைவியையும் இழக்கிறார். சீரியல் கில்லரான சுனில்தான் கொலை செய்து இருப்பார் என அவரை தேடி கண்டுபிடிக்கிறார். போலீசில் பிடிபடும் அவரோ, ஆமா, நான்தான் 28 கொலை செய்தேன். ஆனா, அந்த பெண்ணை கொல்லவில்லை என்கிறார். கதையில் திருப்பம், அப்படியானால் அந்த கொலையை செய்தது யார் ? என்ன மோட்டிவ் என ஹீரோ தவிக்க, அனிகா, சுமேஸ்மூர் கதை விரிகிறது. அந்த காதலுக்கும், இந்த கொலைக்கும் என்ன சம்பந்தம் என்ற ரீதியில் திரைக்கதை செல்கிறது. கதையில் பல திருப்பங்கள், பல கேரக்டர்கள். உண்மையில் கதைக்களம், விறுவிறு சீன்கள், அவ்வப்போதும் வரும் திருப்பங்கள் படத்துக்கு பெரிய பிளஸ்
குடிகார போலீசாக, வேலை இழந்து தவிப்பராக, மனைவியை இழந்து துடிப்பவராக வசந்த்ரவி நன்றாக நடித்து இருக்கிறார். குறிப்பாக, அவருக்கும் வில்லன் சுனிலுக்குமான சீன்கள், அவனை துரத்தி கண்டுபிடிக்கும் சீன்கள், சண்டைக்காட்சி ரசிக்க வைக்கிறது. சுனிலும் தனித்துவமான நடிப்பில், கோபத்தில், டான்சில் மிரட்டியிருக்கிறார். என்ன, எதற்காக இவ்வளவு கொலைகள், ஒரு கையை மட்டும் ஏன் வெட்டி எடுக்கிறார் என்பதற்காக விளக்கத்தை இயக்குனர் சரியாக சொல்லவில்லை.
இடைவேளைக்குபின் வரும் சுமேஷ்மூர், அனிகா காதல் காட்சிகள், அவர்களுக்கு ஏற்படும் பிரச்னைகள், சுமேசின் கோபம் ஆகியவை இடைவேளைக்குபின் படத்தை வேகமாக நகர்த்தி செல்கிறது. இப்படியெல்லாம் ஒரு அபார்ட்மென்டில் நடக்குமா? ஒருவரால் இப்படியெல்லாம் வீட்டிற்குள் இருக்க முடியுமா என்ற கேள்வி மட்டும் லாஜிக் மீறல். அனிகா ஹோம்லியாக நடித்தால், அவர் காதலன் சுமேஷ் இன்னொரு கோணத்தில் மிரட்டி இருக்கிறார். ஹீரோயினாக வரும் மெஹ்ரீன் சில சீன்களில் கொல்லப்படுவதால் அவருக்கு நடிக்க அதிகம் வேலையில்லை. கிரைம், சண்டைகாட்சிகள், அபார்ட்மென்ட் மர்ம காட்சிகளில் ஒளிப்பதிவாளர் பிரபுராகவ் வொர்க் தெரிகிறது. தனது பின்னணி இசையில் படத்தை இன்னும் விறுவிறுப்பாக்கி இருக்கிறார் இசையமைப்பாளர் அஜ்மல். பாடல் மட்டும் ஓகே ரகம்.
முதற்பாதி கொஞ்சம் மெதுவாக நகர்ந்தாலும், இரண்டாம்பாதி வேகம் எடுக்கிறது. சீரியஸ் கொலை என்ற பாதை மாறி, வேறு கதைக்குள் செல்கிறது. முதற்பாதியிலும் சுனிலும், அடுத்த பாதியில் சுமேசும் கலக்கி இருக்கிறார்கள்.இவர்களுக்கு இடையில் கண்பார்வையற்றவராக வரும் ஹீரோ வசந்த்ரவியும் தனது நடிப்பால் ஸ்கோர் செய்து இருக்கிறார். சஸ்பென்ஸ் திரில்லர் கதைகளை விரும்புகிறவர்களுக்கு இந்திரா பிடிக்கும்
கேப்டன் பிரபாகரன்
**
விஜயகாந்த் நடித்த 100வது படம். 1991ல் வெளியாகி வெற்றி பெற்ற படம். 34 ஆண்டுகளுக்குபின் டிஜிட்டலில் ரீ ரிலீஸ் ஆகி இருக்கிறது. சத்யமங்கலம் காட்டுப்பகுதியில் வீரபத்ரன்(மன்சூர்அலிகான்) என்ற சந்தன மர கடத்தல்காரன் அராஜகம் செய்கிறான். தன்னை எதிர்பவர்களை, மரம் வெட்டுவதை காட்டிக்கொடுப்பவர்களை கொடூரமாக கொல்கிறான். அங்கே வன இலாகா அதிகாரியாக பணியாற்றும் சரத்குமாரும் அப்படி கொல்லப்பட, தனது நண்பன் கொலைக்கு பழிவாங்க அதே ஏரியாவுக்கு டூட்டிக்கு போகிறார் கேப்டன் பிரபாகரன் என்ற விஜயகாந்த். பல்வேறு முயற்சிகளை எடுத்து வீரபத்ரன் டீமை அழிக்கிறார். ஆனால், வீரபத்ரனை கைது செய்து அழைத்து வரும்போது அவரை ஒரு போலீஸ் அதிகாரியே கொல்கிறார். வீரபத்ரனை பயன்படுத்தி பணம் சம்பாதிக்கும் தங்கள் திட்டம் வெளியில் தெரிந்துவிடக்கூடாது என அதை செய்கிறார். சும்மா இருப்பாரா கேப்டன் பிரபாகரன். அந்த போலீஸ் அதிகாரி, அவருக்கு துணையாக இருக்கும் மாவட்ட கலெக்டர், அந்த ஏரியா எம்எல்வையும் கொல்கிறார். அவர் மீது கோர்ட்டில் விசாரணை நடக்கிறது? என்ன தீர்ப்பு என்பது கிளைமாக்ஸ். ஆர்.கே.செல்வமணி இயக்கிய இந்த படத்தில் ஆரம்பத்தில் வரும் ரயில், குதிரை சண்டை, கிளைமாக்ஸ் சண்டைக்காட்சி, ரம்யாகிருஷ்ணனின் ஆட்டமா தேரோட்டமா பாடல், அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி பின்னணியில் நடக்கும் ஆக் சன் காட்சிகள், விஜயகாந்த் நடிப்பு, லியாகத்அலிகான் வசனம், இளையராஜா இசை, மன்சூர் வில்லத்தனம், கிளைமாக்ஸ் கோர்ட் காட்சிகள் இன்றும் புதுமையாக இருக்கின்றன. 1990 சினிமா காதலர்கள், விஜயகாந்த் ரசிகர்கள் படத்தை கொண்டாடுவார்கள்.இன்றைய இளம் தலைமுறையினர், ஓ இதுதான் சந்தன கடத்தல் வீரப்பன் கதையா என்று ஆச்சரியப்படுவார்கள். விஜயகாந்த் மனைவி பிரேமலதா, மகன்கள் படம் பார்த்துவிட்டு கண்கலங்கி இருக்கிறார்கள்.அந்த மாதிரியான விஜயகாந்த் ரசிகர்கள் கண்டிப்பாக பீல் பண்ணுவார்கள். அந்த அளவுக்கு நடிப்பிலும், வசனத்திலும், சண்டைக்காட்சியிலும் மிரட்டி இருக்கிறார் விஜயகாந்த்.
மீனாட்சிசுந்தரம், சிறப்பு செய்தியாளர்