எட்டயபுரம் அருகே தாய், மகள் உடல்கள் மீட்பு - போலீசார் விசாரணை!
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள மேல நம்பிபுரம் கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் பூவன். இவரது மனைவி சீதாலட்சுமி (75). இவர்களது மகள் ராமஜெயந்தி (45). ராமஜெயந்தி கருத்து வேறுபாடு காரணமாக தனது கணவரை விட்டு பிரிந்த நிலையில் கடந்த சில வருடங்களாக தனது தாய் சீதாலட்சுமியுடன் வசித்து வந்தார்.
இவர்கள் இருவரும் வீட்டை விட்டு வெளியே வராத காரணத்தினால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டிற்குள் சென்று பார்த்தனர். அப்போது சீதாலட்சுமியும் அவரது மகள் ராமஜெயந்தியும் வீட்டிற்குள் உயிரிழந்த நிலையில் கிடந்தனர். இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அங்கு ஆய்வு செய்தனர்.
மேலும், மோப்ப நாய் மற்றும் தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர். சீதாலட்சுமி மற்றும் ராம ஜெயந்தியின் உடலை கைப்பற்றிய போலீசார் உடற்கூராய்விற்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்த இருவரின் கம்மல்கள் மற்றும் 13 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.