அதிக தொழிற்சாலைகள், வேலைவாய்ப்பு: தமிழ்நாடு முதல் இடம் - #NITIAayog அறிக்கை!
2022-23-நிதியாண்டில் தொழிற்சாலைகள் குறித்த மதிப்பீட்டு அறிக்கையில் அதிக தொழிற்சாலைகள் கொண்டதிலும், அதிக வேலைவாய்ப்புகளை வழங்கியதிலும் தமிழ்நாடு முதலிடத்தில் இருப்பதாக நிதி ஆயோக் புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது.
2022-23-ம் நிதியாண்டில் தொழிற்சாலைகள் குறித்த வருடாந்திர மதிப்பீட்டுக்கு (ஏஎஸ்ஐ) கடந்த 2023-ம் ஆண்டு நவம்பர் முதல் 2024 ஜுன் வரை மத்திய புள்ளியியல், திட்ட அமலாக்கத் துறை மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வறிக்கையை நிதி ஆயோக் நேற்று முன்தினம் (செப். 30) வெளியிட்டது.
அந்த ஆய்வறிக்கையில் கூறியிருப்பதாவது:
“தொழில் நிறுவனங்களின் அமைப்பு, வளர்ச்சிக்கு தேவையான மாற்றங்கள் மேற்கொள்ளும் நோக்கத்துடன் தகவல்களை வழங்க, மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் ஆண்டுதோறும் ஏஎஸ்ஐ ஆய்வை மேற்கொள்கிறது. தொழிற்சாலைகளின் உற்பத்தித் திறன், மதிப்புக் கூட்டுதல், வேலைவாய்ப்பு, மூலதன உருவாக்கம் போன்றவற்றின் அடிப்படையில், தொழிற்சாலைகள் குறித்த மதிப்பீட்டு அறிக்கை ஆண்டு தோறும் தயாரிக்கப்படுகிறது.
அந்தவகையில், 2022-23 நிதியாண்டுக்கான மதிப்பீட்டு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இது மாநிலங்களுக்கும் தேசிய கணக்குகளுக்கான புள்ளி விவரங்களுக்கு மதிப்பீட்டு உள்ளீடுகளை வழங்குகிறது. இந்த ஆய்வறிக்கையில் 2022-23-ம் ஆண்டின் விலை நிலவரம் அடிப்படையில், மொத்த மதிப்பு கூட்டுதல் (GVA) அதற்கு முந்தைய (2021-22) ஆண்டை விட 7.3% அதிகரித்துள்ளது. இந்தக் காலகட்டத்தில் உள்ளீட்டுப் பொருள்களின் அளவு 24.4% அதிகரித்துள்ளது. அதேபோல், உற்பத்திப் பொருளின் அளவு 21.5% அதிகரித்துள்ளது.
கொரோனா நோய்த் தொற்றுக்கு பிந்தைய 2022-23-ம் ஆண்டில் முதலீடு (மூலதனம்), உள்ளீடு, வெளியீடு, மொத்த மதிப்புக் கூட்டுதல், வேலைவாய்ப்பு, ஊதியங்கள் போன்ற முக்கியமான பொருளாதார அளவுருக்களில் பெரும்பாலானவற்றில் தொழில் துறையில் வளர்ச்சி காணப்பட்டுள்ளது. குறிப்பாக அடிப்படை உலோகம், நிலக்கரி, சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியப் பொருள்கள், உணவுப் பொருள்கள், ரசாயனப் பொருள்கள், மோட்டார் வாகனத் தொழில்துறை போன்றவற்றின் செயல்பாடுகள் இத்தகைய வளர்ச்சிக்கு வழி கண்டுள்ளது.
மதிப்புக் கூட்டுதலில் மகாராஷ்டிரா முதலிடத்தை வகிக்கிறது. 2வது, 3வது இடத்தில் முறையே குஜராத், தமிழ்நாடு உள்ளன. தொடர்ந்து கர்நாடகா, உத்தர பிரதேசம் இடம் பெற்றுள்ளன. இந்த 5 மாநிலங்களும் நாட்டின் மொத்த மதிப்புக் கூட்டுதல் அடிப்படையிலான மொத்த உற்பத்தியில் 54% அதிகமான பங்களிப்பை வழங்குகிறது.
இந்த மாநிலங்களில் அதிக நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிய மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு (15%) முதலிடத்திலும், மற்ற மாநிலங்கள் முறையே மகாராஷ்டிரா (12.8%), குஜராத் (12.6%), உத்தரப்பிரதேசம், கர்நாடகா ஆகியவை உள்ளன. இந்த 5 மாநிலங்கள் மட்டும் 2022-23 -ம் ஆண்டில் உற்பத்தித் துறை சார்ந்த வேலைவாய்ப்பில் (1,84,94,962 பேர்) மொத்தம் சுமார் 55 பங்களிப்பை வழங்கியுள்ளது.
அதிக தொழிற்சாலைகள் கொண்ட மாநிலங்கள் வரிசையிலும் தமிழ்நாடு (15.6) முதலிடத்தில் உள்ளது. மற்ற மாநிலங்களான குஜராத் (12%), மகாராஷ்டிரா, உபி, ஆந்திரா ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளது”
இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.