“பாலியல் அத்துமீறல்களில் நீதியை வழங்குவதை விட குற்றங்களை மறைப்பதற்கே அதிக முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன!” - ராகுல் காந்தி குற்றச்சாட்டு
பாலியல் அத்துமீறல்களில் நீதியை வழங்குவதை விட குற்றங்களை மறைப்பதற்கே அதிக முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என எதிர்கட்சித்தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் மக்களவைத் தலைவர் ராகுல் காந்தி பதிவிட்டுள்ளதாவது :
''மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம், பிகாரைத் தொடர்ந்து, மகாராஷ்டிரத்திலும் மகள்களுக்கு எதிரான வெட்கக்கேடான குற்றங்கள் நடைபெற்றுள்ளன. ஒரு சமூகமாக நாம் எங்கே சென்றுகொண்டிருக்கிறோம் என சிந்திக்கத் தூண்டுகிறது? பத்லாபூரில் அப்பாவி மகள் இருவர் மீது இழைக்கப்பட்ட குற்றத்திற்குப் பிறகு, நீதி கேட்டு பொதுமக்கள் வீதிக்கு வரும் வரை, அவர்களுக்கு ஆதரவான எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
முதல் தகவல் அறிக்கை (எஃப்.ஐ.ஆர்) பதிவு செய்ய போராட்டம் நடத்த வேண்டுமா? பாதிக்கப்பட்டவர்கள் காவல் நிலையத்துக்குச் செல்வதற்குக் கூட சிரமப்படுவது ஏன்?நீதியை வழங்குவதை விட குற்றங்களை மறைப்பதற்கே அதிக முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதில் அதிகம் பாதிக்கப்படுவது பெண்களும் நலிந்த பிரிவைச் சேர்ந்த மக்களும்தான்.
இதையும் படியுங்கள் : கொல்கத்தா விவகாரம் எதிரொலி | #Kochi தனியார் மருத்துவமனை – பெண் ஊழியர்களுக்கு தற்காப்புக்கலை பயிற்சி!
முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்யாதது பாதிக்கப்பட்டவர்களை ஊக்கப்படுத்துவது மட்டுமின்றி குற்றவாளிகளை தைரியப்படுத்துகிறது. சமூகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்த என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை அனைத்து மாநில அரசுகளும், குடிமக்களும், அரசியல் கட்சிகளும் தீவிரமாக சிந்திக்க வேண்டும். நீதி என்பது ஒவ்வொரு குடிமகனின் உரிமை, அவர் காவல் துறை மற்றும் அரசு நிர்வாக விருப்பத்தின் அடிப்படையில் இருக்க முடியாது''
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.