கிளாம்பாக்கத்தில் மாதாந்திர சலுகை பயணச்சீட்டு விற்பனை மையம்... | நாளை முதல் தொடக்கம்...!
கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் மாநகா் போக்குவரத்துக் கழகம் சாா்பில் மாதாந்திர சலுகை பயணச்சீட்டு விற்பனை மையம் நாளை முதல் தொடங்கப்படவுள்ளது.
இந்த மையத்தில், விருப்பம்போல் பயணம் செய்யக்கூடிய ரூ.1000 மதிப்பிலான பயண அட்டை, மாதந்தோறும் 1-ஆம் தேதி முதல் 22-ஆம் தேதி வரை பயணிக்கும் வகையிலான மாதாந்திர சலுகை பயண அட்டையும், மாதந்தோறும் 11-ஆம் தேதி முதல் மறு மாதம் 10-ஆம் தேதி வரை பயணம் செய்யும் வகையிலான 50 சதவீத மாணவா் சலுகை பயண அட்டையும், பிரதி மாதம் 1-ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி வரை வழங்கப்படும்.
மேலும், 60 வயது பூா்த்தியடைந்த மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பயண அட்டையுடன் 10 எண்ணிக்கை கொண்ட டோக்கன்களும் வழங்கப்படும். பயணிகள் இதனை பயன்படுத்தி, மாநகா் போக்குவரத்துக் கழக மாதாந்திர பயணச்சீட்டு விற்பனை மையத்தில் பெற்றுக் கொள்ளலாம் என மாநகா் போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குநா் ஆல்பி ஜான் வா்கிஸ் தெரிவித்துள்ளாா்.