பருவமழை முன்னெச்சரிக்கை - அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து, உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று காலை 11 மணிக்கு ஆலோசனை நடத்தவுள்ளார்.
தென்மேற்கு பருவமழை முடிவடைந்த நிலையில், நாளை முதல் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது. கடந்தாண்டை விட இந்தாண்டு தென்மேற்கு பருவமழை அதிகமாகவே இருந்தது. அதுபோல இந்தமுறை வடகிழக்கு பருவமழையும் இயல்பைவிட அதிகமாக பெய்ய வாய்ப்புள்ளது எனவும், வடதமிகழத்தில் இயல்பைவிட அதிகமாகவும், தென்தமிழகத்தில் இயல்பைவிட குறைவாகவும் மழைபொழிய வாய்ப்புள்ளது என தென்மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையால் தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, சென்னை போன்ற மாவட்டங்கள் கடுமையாக பாதித்தன. இந்தாண்டு அதனை தடுக்கும் பொருட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் இதுவரை எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, உயர் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்துகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இதில் சென்னை மாநகராட்சி உட்பட அனைத்து மாவட்ட நிர்வாக அதிகாரிகள், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.