பருவமழை தீவிரம் - முல்லைப் பெரியாறு அணையில் நீர்திறப்பு அதிகரிப்பு!
தமிழ்நாடு, கேரளா எல்லையில் 152 அடி உயரம் கொண்ட முல்லைப் பெரியாறு அணை உள்ளது. தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட ஐந்து மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், விவசாய நீர்ப்பாசன ஆதாரமாகவும் இந்த முல்லைப் பெரியாறு அணை உள்ளது.
இந்த நிலையில் முல்லைப் பெரியாறு அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதன் காரணமாக அணைக்கு வரும் நீர்வரத்து 6125.16கன அடியாக அதிகரித்துள்ளது. மேலும் அணையில் இருந்து தமிழக பகுதிக்கு வெளியேற்றப்படும் நீரின் அளவு 400 கன
அடியில் இருந்து 1400 அடியாக அதிகரித்துள்ளதால், தமிழகப் பகுதியான லோயர் கேம்ப் முதல் பழனிசெட்டிபெட்டி வரை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் ஆற்றின் கரையோர பகுதிகளுக்கு பொதுமக்கள் யாரும் செல்ல வேண்டாம் என மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தடை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அணையின் மொத்த நீர் இருப்பு 4664.75 மில்லியன் கன அடியாகவும் உள்ளது. தற்போது 152 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து 129.85 அடியாக இருந்து வருகிறது. அணை பகுதியில் மழையின் அளவு 27.8மில்லி மீட்டர் அளவும், தேக்கடி பகுதியில் 13.6 மில்லி மீட்டர் அளவும் பதிவாகி பெய்து வருவதால் நீர்வரத்து மேலும் அதிகரிக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களாக மழை பொழிவு இல்லாததால் அணையின் நீர்மட்டம் சரிந்து வந்த நிலையில், தற்பொழுது பருவமழை தீவிரம் அடைந்து மழை பொழிவு ஏற்பட்டு அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவது தென் மாவட்ட விவசாயிகளிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.