கோயில் பகுதியில் மது போதையில் சுற்றி திரிந்த குரங்கு - மீட்டு சிகிச்சை அளித்த சமூக ஆர்வலர்!
திருப்பரங்குன்றம் சன்னதி தெருவில் மது போதையில் சுற்றி திரிந்த குரங்கினை சமூக ஆர்வலர் மீட்டு அதற்கு சிகிச்சை அளித்த சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் உள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்
முக்கியமான ஆன்மீக தலமாகும். இங்கு முருகனை தரிசிப்பதற்காக தினந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வெளியூர், வெளி மாவட்டங்கள், பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்து செல்வது வழக்கம்.
மக்கள் கூட்டம் அலைமோதும் இந்த பகுதியில் உள்ள சன்னதி தெருவில் குரங்கு ஒன்று மதுபோதையில் அங்கும் இங்கும் சுற்று திரிந்துள்ளது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் ஆத்திரமடைந்து அதன் மீது தண்ணீர் ஊற்றி விரட்டி அடித்துள்ளனர். இந்த நிலையில் அதே தெருவில் உள்ள ராதிகா என்பவர் வீட்டு மாடியில் குரங்கு மது போதையில் நகர முடியாமல் இருந்துள்ளது. அந்த குரங்கினை கண்ட ராதிகா இரக்கப்பட்டு உடனே இணையத்தின் மூலம் திருநகரைச் சேர்ந்த சமூக ஆர்வலரும் பாம்பு பிடி வீரருமான ஸ்நேக் பாபுவை தொடர்பு கொண்டு மதுபோதையில் இருக்கும் குரங்கு குறித்து தெரிவித்துள்ளார்.
உடனே சம்பவ இடத்திற்கு வந்த சினேக் பாபு மதுபோதையில் இருந்த அந்த குட்டி குரங்கை மீட்டு மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி, அதற்கு மருந்து அளித்தார். மலைப்பகுதியில் கீழே வீசப்பட்ட மது பாட்டிலில் இருந்து குரங்கு மதுவை குடித்ததா அல்லது சமூக விரோதிகள் யாரேனும் குரங்குக்கு மதுவை பானத்தில் ஊற்றி கொடுத்தார்களா என்பது தெரியவில்லை என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.