#IIT கனவை பறித்த பணம்…கடைசி நம்பிக்கையாக உச்சநீதிமன்றத்தை நாடிய தலித் மாணவர்!
தலித் மாணவர் ஒருவர் ஜேஇஇ தேர்வில் தேர்ச்சி பெற்றும் சேர்க்கை கட்டணம் இல்லாததால் ஐஐடி-யில் சேரும் வாய்ப்பை இழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம், முசாஃபா்நகா் மாவட்டம் திடோரா கிராமத்தைச் சோ்ந்தவர் அதுல் குமாா் (18). இவரின் தந்தை கூலித் தொழில் செய்து வருகிறார். இந்த சூழலில், எஸ்.சி. சமூகப் பிரிவைச் சோ்ந்த அதுல் குமார் நிகழாண்டு ஜேஇஇ தோ்வில் தேர்ச்சி பெற்றாா். இதனையடுத்து ஜாா்க்கண்ட் மாநிலம் தன்பாத் ஐஐடி-யில் பி.டெக் படிக்க இவருக்கு இடம் ஒதுக்கப்பட்டது. அதற்கான சோ்க்கைக் கட்டணம் ரூ.17,500 -யை அடுத்த 4 நாள்களுக்குள், அதாவது கடந்த ஜூன் 24ம் தேதி மாலை 5 மணிக்குள் செலுத்த அறிவுறுத்தப்பட்டது.
அவருடைய பெற்றோரால் 4 நாட்களுக்குள் அந்த தொகையை திரட்ட முடியவில்லை. காலக்கெடுவுக்குள் கட்டணத்தை செலுத்தாததால், ஐஐடி-யில் ஒதுக்கப்பட்ட இடத்தை அவர் இழந்தார். தேர்வில் தேர்ச்சி பெற்றும் பணம் இல்லாததால் ஐஐடியில் சேர முடியாதது அவர்களுக்கு வேதனை அளித்தது. இதனையடுத்து அவர்கள் தேசிய தாழ்த்தப்பட்டோா் (எஸ்.சி.) ஆணையம் மற்றும் ஜாா்க்கண்ட் மாநில சட்ட உதவி ஆணையத்தில் முறையிட்டனர்.
ஆனால், ஐஐடி ஒருங்கிணைந்த சோ்க்கையை நிகழாண்டு சென்னை ஐஐடி நடத்தியதால், இந்த விவகாரம் தொடா்பாக சென்னை உயா்நீதிமன்றத்தை அணுகுமாறு, சட்ட உதவி ஆணையம் அவர்களுக்கு அறிவுறுத்தியது. அதன்படி, அவர்கள் சென்னை உயா்நீதிமன்றத்தை நாடினர். இச்சம்பவம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் முறையிடுமாறு அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. தொடர்ந்து, மாணவர் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமா்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்கறிஞா், "அதுல் குமாா், ஜேஇஇ முதன்மை தோ்வை தனது கடைசி வாய்ப்பில் அதாவது இரண்டாவது முயற்சியில் தகுதி பெற்றார். நீதிமன்றம் அவருக்கு உதவ முன்வரவில்லை என்றால், அவா் ஐஐடி-யில் சேரும் வாய்ப்பை இனி இழந்துவிடுவாா்" என முறையிட்டாா்.
தொடர்ந்து, மாணவருக்கு முடிந்த உதவிகளை செய்வதாக நீதிபதிகள் உறுதியளித்தனர். மேலும், "ஐஐடி-யில் சோ்க்கைக் கட்டணம் செலுத்துவதற்கான காலக் கெடு கடந்த ஜூன் 24ம் தேதியே முடிவடைந்த நிலையில், கடந்த 3 மாதங்களாக என்ன செய்துகொண்டிருந்தீா்கள்" என்று கேள்வி எழுப்பினா். இந்த விவகாரம் தொடா்பாக விளக்கமளிக்குமாறு சென்னை ஐஐடி-க்கு நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டனா்.