”நீட் தேர்வில் ஆதி முதல் அந்தம் வரை பணம்தான் விளையாடுகிறது” - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விமர்சனம்!
இந்தாண்டிற்கான நீட் இளநிலை நுழைவுத் தேர்வில், முறைகேடு செய்து பணம் பெற்றுக்கொண்டு, தகுதியற்றவர்களுக்கு அரசு மருத்துவ கல்லூரில் சீட் ஒதுக்கிய குற்றச்சாட்டின் பேரில், மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த தேசிய தேர்வு முகமை அதிகாரிகள், மருத்துவர்கள் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.
இந்த சம்பவத்தை சுட்டிக்காட்டிய முதலமைச்சர் மு.க, ஸ்டாலின் நீட் தேர்வில் ஆதி முதல் அந்தம் வரை பணம்தான் விளையாடுகிறது என விமர்சனம் செய்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பதிவில், “தரம், தரம் என்றார்கள்! நீட் தேர்வின் ஆதி முதல் அந்தம் வரை பணம், பணம்தான் விளையாடுகிறது. நீட் எனும் தேர்வுமுறையே ஒரு moral ஊழல்!
அது போதாதென்று, வினாத்தாள் தொடங்கி, தேர்வறை, முடிவுகள் வெளியீடு வரை ஒவ்வொரு நிலையிலும் நிறைந்திருப்பது குளறுபடிகளும் முறைகேடுகளும்தான். நீட் - முதல் கோணல் முற்றிலும் கோணல்! RSS - BJP மாநாடுகளில் showpiece-ஆக உட்கார நேரமிருக்கும் அதிமுகவினருக்கு இவற்றை எதிர்த்து, தங்கள் எஜமானர்களிடம் பேச நேரமோ, மானமோ இல்லை”
இவ்வாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.