கேரள திரையுலகில் புயலை கிளப்பிய ‘ஹேமா கமிட்டி அறிக்கை’! #AMMA தலைவர் பதவியை ராஜிநாமா செய்தார் #Mohanlal!
கேரளாவில் ஹேமா கமிட்டி அறிக்கை வெளியாகி நடிகைகளுக்கு எதிரான பாலியல் அத்துமீறல்கள் குறித்த புகார்கள் பூதாகரமாகி வரும் நிலையில், மலையாள நடிகர்கள் சங்கமான ‘அம்மா’ - ன் தலைவர் பதவியை மோகன்லால் ராஜினாமா செய்துள்ளார். இதனையடுத்து அந்த அமைப்பே கூண்டோடு கலைக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் ஓடும் வாகனத்தில் நடிகை ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதை அடுத்து, இந்த வழக்கில் நடிகர் திலீப் தற்போது விசாரணையை எதிர்கொண்டுள்ளார். இதன் தொடர்ச்சியாக சினிமா துறையில் எழுந்த பாலியல் புகார்கள் குறித்து விசாரிக்க ஹேமா கமிஷன் அமைக்கப்பட்டது.
அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
- `சில தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர்களின் பிடியில் மலையாள சினிமா இருக்கிறது. இவர்கள், மற்றவர்கள்மீது அதிகாரத்தைச் செலுத்தி வருகின்றனர்.
- அந்த மாஃபியா குழு இயக்குநர்களையும், தயாரிப்பாளர்களையும், நடிகர்களையும் இந்தத் துறையிலிருந்து வெளியேற்றும் அதிகாரம் படைத்திருக்கிறது.
- இந்த மாஃபியாவின் முன்வரிசையில் 10, 15 பேர்கொண்ட பவர் குரூப் இருக்கிறது.
- தெரிந்தோ, தெரியாமலோ இந்த பவர் குரூப்புக்கு எதிராகப் பேசினாலோ, செயல்பட்டாலோ சினிமா துறையிலிருந்து அவர்களை விலக்கிவைக்கவும், அவர்களிடமிருந்து தொடர்ந்து தொல்லைகளைச் சந்திக்கவும் நேரிடும்.
- படப்பிடிப்பு செட்டில், போதைப்பொருள்கள் பயன்படுத்துவது அதிகமாகியிருக்கிறது.
- போதையில்தான் பாலியல் அத்துமீறல்கள் அதிகம் நடந்திருக்கின்றன.
- பெரும்பாலான நடிகர்கள் மது போதையில்தான் படபிடிப்பு தளத்துக்கு வருகிறார்கள்.
- இவர்களில் பெரும்பாலானோர் மது மட்டுமல்லாமல் போதைப்பொருள்களையும் பயன்படுத்துகிறார்கள்” இது போன்ற பல அதிர்ச்சிகரமான தகவல்கள் ஹேமா கமிஷன் அறிக்கையில் கூறப்பட்டிருக்கின்றன.
இந்நிலையில், ஹேமா கமிஷன் அறிக்கை அரசியல்ரீதியாகவும் அதிர்வலையை ஏற்படுத்தியது. சினிமா துறையில் பெண்களுக்கு எதிரான வக்கிரங்கள் நடந்தது 2019-ம் ஆண்டே ஹேமா கமிஷன் அறிக்கை மூலம் ஆதாரபூர்வமாகக் கிடைத்தும், கடந்த நான்கரை ஆண்டுகளாக அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என எதிர்க்கட்சியான காங்கிரஸ் கேள்வி எழுப்பியது.
மலையாள திரையுலகின் மூத்த நடிகர்களான மோகன்லால், மம்முட்டி போன்றவர்கள் எந்தவொரு கருத்துக்களையும் தற்போது வரை தெரிவிக்கவில்லை என்று ஏற்கனவே பிரித்விராஜ் உள்ளிட்டோர் கருத்து தெரிவித்திருந்த நிலையில், இந்த அம்மா சங்கத்தில் இப்படியொரு முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது கேரள திரையுலகில் கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.