'ஹசீனா ஆன்ட்டி...' - பிரணாப் முகா்ஜியின் மகள் பதிவு - இணையத்தில் வைரல்!
இந்தியாவில் தஞ்சமடைந்த ஷேக் ஹசீனாவுக்கு ஆதரவாகவும், ஆறுதலாகவும் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகா்ஜியின் மகள் சர்மிஷ்டா முகர்ஜி பதிவிட்டுள்ளார்.
வங்கதேசத்தில் விடுதலை போரில் பங்கேற்றவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு அரசு வேலையில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதை எதிர்த்து போராட்டம் வெடித்தது. இந்த போராட்டம் நாளடைவில் கலவரமாக மாறியது. இந்த கலவரத்தில் 100க்கும் மேற்பட்டோர் இறந்தனர். நிலைமை மோசமானதை அடுத்து அந்நாட்டின் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜிநாமா செய்துவிட்டு, இந்தியாவில் தஞ்சமடைந்தார்.
இந்நிலையில், ஷேக் ஹசீனாவுக்கு ஆதரவாகவும், ஆறுதலாகவும் முன்னாள் குடியரசுத் தலைவா் பிரணாப் முகா்ஜியின் மகள் சா்மிஷ்டா முகா்ஜி தனது ‘எக்ஸ்’ வலைதளத்தில் பதிவு செய்துள்ளார். அந்த பதிவில், ஷேக் ஹசீனாவை, ‘ஹசீனா ஆன்ட்டி’ என்று அவர் அழைத்திருப்பதில் இருந்து, அவர்களுக்கு இடையேயான நெருக்கம் எத்தகையது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
பிரிவினை கேட்டு கிழக்கு பாகிஸ்தானில் ஷேக் முஜிபுர் ரஹ்மானின் தலைமையில் 1971ம் ஆண்டு போராட்டம் தொடங்கியதில் இருந்து ஆரம்பமாகிறது இரண்டு குடும்பங்களுக்கும் இடையேயான நெருக்கம். முஜிபுர் ரஹ்மானுடன் தொடர்பில் இருந்ததால், வங்கதேச விடுதலைப் போராட்ட காலத்தில் இந்தியா சார்பில் ‘முக்தி வாஹினி’ போராட்டக்காரர்களுக்கு உதவியதில் பிரணாப் முகர்ஜிக்கு முக்கியப் பங்கு உண்டு.
இதையும் படியுங்கள்: பறிபோன தங்கப் பதக்க கனவு – ஒலிம்பிக்கில் இருந்து வினேஷ் போகத் தகுதி நீக்கம்!
அன்றைய பிரதமர் இந்திரா காந்திக்கும் முஜிபுர் ரஹ்மானுக்கும் இடையே தொடர்பில் இருந்தவர் பிரணாப். 1975ம் ஆண்டு வங்கதேசத்தில் நடந்த ராணுவப் புரட்சியில் ‘வங்கபந்து’ முஜிபுர் ரஹ்மானும் குடும்பத்தினரும் படுகொலை செய்யப்பட்டபோது மேற்கு ஜெர்மனியில் இருந்ததால் ஷேக் ஹசீனாவும் அவரது சகோதரியும் உயிர் தப்பினர்.
முஜிபுர் ரஹ்மானின் படுகொலையைத் தொடர்ந்து, 1975 முதல் 1981 வரையில் இந்தியாவின் பாதுகாப்பில் அவர்களை டெல்லியில் தங்க இந்திரா காந்தி ஒப்புக்கொண்டார். அப்போது ஷேக் ஹசீனாவையும் அவரது சகோதரியையும் பாா்த்துக் கொள்ளும் பொறுப்பு பிரணாப் முகர்ஜியின் குடும்பத்துக்குத் தரப்பட்டது. அப்போது ஏற்பட்ட அந்த நெருக்கம் இப்போது வரை தொடர்கிறது.
இது தொடர்பாக பிரணாப் முகா்ஜியின் மகள் சா்மிஷ்டா முகா்ஜி வெளியிட்டுள்ள பதிவில் :
‘‘பாதுகாப்பாகவும், தைரியமாகவும் இருங்கள் ஹசீனா ஆன்ட்டி; நாளை என்பது இன்னொரு நாள்; என்னுடைய பிராா்த்தனைகள் உங்களுக்காக இருக்கும்’’ என்று பிரணாப் முகா்ஜியின் மகள் சா்மிஷ்டா ‘எக்ஸ்’ வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.