'Hello from #Melodi Team' - இத்தாலி பிரதமரின் வீடியோ வைரல்!
இத்தாலிய பிரதமர் ஜார்ஜியா மெலோனி உடன் இந்திய பிரதமர் மோடி எடுத்துக் கொண்ட செல்ஃபி வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
ஜி 7 மாநாட்டில் கலந்து கொள்ளச் சென்ற பிரதமர் நரேந்திர மோடியுடன் இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி எடுத்துக் கொண்ட செல்ஃபி இணையத்தில் வைரலாகி வருகிறது. 50-வது ஜி7 உச்சிமாநாடு இத்தாலியின் அபுலியாவில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்து கொண்டார் பிரதமர் நரேந்திர மோடி. மாநாட்டின்போது பிரதமர் நரேந்திர மோடியுடன் இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி எடுத்துக் கொண்ட செல்ஃபி புகைப்படம் மற்றும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
மேலும் வீடியோ ஒன்றைப் பகிர்ந்த மெலோனி, ’மெலோடி டீமிடம் இருந்து ஹலோ’ ( Hello from the Melodi team ) என்று கூற பின்னால் பிரதமர் மோடி சத்தமாக சிரித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார்.
மெலோனி - மோடி செல்ஃபி வீடியோ வைரலாவது இது முதன்முறையல்ல. முன்னதாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனியுடன், பிரதமர் நரேந்திர மோடி எடுத்துக்கொண்ட, 'செல்பி' பெரும் வரவேற்பை பெற்றது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துபாய் நகரில் நடந்த ஐ.நா.,வின் பருவநிலை மாறுபாடு தொடர்பான மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி உலகத் தலைவர்களை சந்தித்துப் பேசினார். அந்த வகையில் மாநாட்டில் பங்கேற்ற, இத்தாலிய பிரதமர் ஜார்ஜியா மெலோனியையும் பிரதமர் சந்தித்தார். இருவரும் செல்பி எடுத்துக் கொண்டனர்.
இந்தப் படத்தை, தன் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்ட மெலோனி, ‘பருவநிலை மாறுபாடு மாநாட்டில் சிறந்த நண்பருடன்’ எனக் குறிப்பிட்டு இருந்தார். மேலும், இருவரின் பெயரையும் குறிக்கும் வகையில், ‘மெலோடி’ என்ற வார்த்தையையும் அவர் பயன்படுத்தினார். அந்த செல்ஃபி வைரலானது, #மெலோடியும் ட்ரெண்டானது நினைவுகூரத்தக்கது.