உலகளவில் பிரபலமான தலைவர்கள் பட்டியலில் பைடன், ஸ்டார்மரை பின்னுக்கு தள்ளி மீண்டும் முதலிடத்தை பிடித்த பிரதமர் மோடி!
உலகின் பிரபலமான தலைவர்கள் பட்டியலில் பிரதமர் மோடி மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார். மார்னிங் கன்சல்ட் என்ற அமெரிக்க ஆய்வு நிறுவனம் வெளியிட்ட கருத்துக்கணிப்பு அடிப்படையில் இந்த பட்டியல் தயார் செய்யப்பட்டது.
உலகின் மிகவும் பிரபலமான தலைவர்களின் பட்டியலில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார். மார்னிங் கன்சல்ட் என்ற அமெரிக்க ஆய்வு நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில் 69% மக்களின் ஆதரவை பெற்று அவர் முதலிடத்தில் உள்ளார். அமெரிக்க அதிபர் ஜோ பைடன், புதிய பிரிட்டன் பிரதமர் கீர் ஸ்டார்மர், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் உள்ளிட்ட 25 உலக தலைவர்கள் அடங்கிய பட்டியலில் அனைவரையும் பிரதமர் மோடி பின்னுக்கு தள்ளி உள்ளார்.
இந்தாண்டு ஜூலை 8-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில் இந்த கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. கருத்துக்கணிப்பு எதன் அடிப்படையில் எடுக்கப்பட்டது என்பதை விவரித்த மார்னிங் கன்சல்ட் நிறுவனம், "ஒவ்வொரு நாட்டிலும் வயது வந்த குடிமக்களிடம் இருந்து பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், ஒவ்வொரு நாட்டின் மாதிரி அளவும் வேறுபடுகிறது.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் 39% ஆதரவை பெற்ற நிலையில், பிரிட்டன் பிரதமர் ஸ்டார்மர் 45% ஆதரவை பெற்றுள்ளார். மெக்சிகோ அதிபர் ஆண்ட்ரெஸ் மானுவல் லோபஸ் ஒப்ராடோர் 61% ஆதரவை பெற்று இரண்டாவது இடத்தையும், அர்ஜென்டினா அதிபர் ஜேவியர் மிலே 60% ஆதரவை பெற்று மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளார்” இவ்வாறு தெரிவித்துள்ளது.