மொபைல் மற்றும் கணினி பார்ப்பதால் கண்களுக்கு எந்த பிரச்னையும் வராதா? - #TNOA தலைவர் கூறுவது என்ன!
தமிழ்நாடு கண் மருத்துவர் சங்கத்தின் தலைவராக பொறுப்பேற்றுள்ள அருள்மொழி வர்மன் மொபைல் மற்றும் கணினி பார்ப்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் தமிழ்நாடு கண் மருத்துவர்கள் சங்கத்தின் 71வது கருத்தரங்கம் இன்று (ஆக. 16) தொடங்கியது. 3 நாட்கள் நடைபெறும் இந்த கருத்தரங்கத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தொடங்கி வைத்தார். இந்திய கிரிக்கெட் வீரர் அஷ்வின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் கண் மருத்துவம் சார்ந்த உபகரணங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.
இந்நிலையில் தமிழ்நாடு கண் மருத்துவர் சங்கத்தின் புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள அருள்மொழிவர்மன் செய்தியாளளை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,
“மொபைல் போன், கணினி பார்ப்பதால் கண்களுக்கு எந்த பிரச்னையும் வராது. அவற்றை பார்ப்பதற்கு UV கண்ணாடிகள் அணியத் தேவையில்லை. தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு மட்டும் 6 லட்சம் பேர் இலவசமாக கண் மாற்று அறுவை சிகிச்சை செய்துள்ளனர். தமிழ்நாடு கண் மருத்துவத்தில் உலகில் முதலிடத்தில் உள்ளது. மொபைல் போன்கள் மற்றும் கணினி ஆகியவற்றை பயன்படுத்தும் போது மிகவும் நெருக்கமாக இல்லாமல் சற்று தூரம் தள்ளி வைத்து உபயோகிக்க வேண்டும். தற்போது நிலவும் சுற்றுச்சூழல் மாசுபாட்டினால் கண்களுக்கு எப்போதும் அலர்ஜி உண்டாகும் அபாயம் உள்ளது.
40 வயதிற்கு மேற்பட்டவர்கள் ஆண்டுக்கு இருமுறை கட்டாயம் கண் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இந்தியாவில் அதிகம் நீரழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளனர். நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கண்புரை நோய் ஏற்படும் போது அதனை தீர்ப்பது மிகவும் கடினமான ஒன்றே. இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின், அமைச்சர் சுப்பிரமணியம் இந்த நிகழ்ச்சியில் பங்கு பெற்றதில் சந்தோஷம்” என தெரிவித்தார்.