#KalaingarMagalirUrimaiThogai: வதந்தியால் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் குவிந்த பெண்கள்!
மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கான சிறப்பு முகாம் நடைபெறுவதாக சமூக வலைதளத்தில் பரவிய தவறான தகவலால் நூற்றுக்கணக்கான பெண்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களை முற்றுகையிட்டனர்.
திமுக ஆட்சிக்கு வந்தால் குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என கடந்த சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது அக்கட்சி சார்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டது. இத்திட்டத்திற்கான தகுதி வாய்ந்த பயனாளிகளை கண்டறிய விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இந்த திட்டத்தை கடந்த ஆண்டு அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15ஆம் தேதி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இத்திட்டத்திற்கு சுமார் ஒரு கோடிக்கும் அதிகமான குடும்பத் தலைவிகள் தகுதியானவர்களாக தேர்வு செய்யப்பட்ட நிலையில் பலரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. நிராகரிக்கப்பட்டவர்களும் மேல்முறையீடு செய்ய வழிவகைகள் செய்யப்பட்டன. தொடர்ந்து, தேர்ந்தெடுக்கப்பட்ட குடும்பத் தலைவிகளுக்கு மாதம் மாதம் ரூ.1000 வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.
மகளிர் உரிமைத்தொகைக்காக பலமுறை விண்ணப்பித்தும் தங்களுக்கு இதுவரை பணம் கிடைக்காததால், இந்த சிறப்பு முகாமில் எங்களுக்குப் பணம் கிடைக்கும் என்று நம்பி வந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர். இதனையடுதது ஆட்சியர் அலுவலக அதிகாரிகள், இதுபோன்ற எந்த முகாமும் நடக்கவில்லை என்று கூறி அந்த பெண்களை திருப்பி அனுப்பி வைத்தனர்.
அதேபோல், மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் 100க்கும் மேற்பட்ட பெண்கள் குவிந்தனர். உசிலம்பட்டி, திருமங்கலம், அலங்காநல்லூர், பேரையூர் உள்ளிட்ட தொலைதூர பகுதிகளில் இருந்தும் பெண்கள் வந்திருந்தனர். வதந்திகளை நம்ப வேண்டாம் என அப்பெண்களிடம் மாவட்ட ஆட்சியர் சங்கீதா அறிவுறுத்தினார்.