போக்குவரத்து ஊழியர்களுடன் இன்று மீண்டும் அமைச்சர் சிவசங்கர் பேச்சுவார்த்தை!
வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ள போக்குவரத்து தொழிற்சங்கங்களிடம் முன்னதாக நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த நிலையில், இன்று மீண்டும் போக்குவரத்து ஊழியர்களுடன் அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
போக்குவரத்துத் துறையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், கருணை அடிப்படையில் விண்ணப்பித்துக் காத்திருக்கும் நபர்களுக்கு பணி வழங்க வேண்டும், ஓய்வு பெற்றவர்களுக்கு பஞ்சப்படி வழங்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்துத் தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம் அறிவித்தன.
சிஐடியு, ஏஐடியுசி, எச்எம்எஸ் ஆகிய தொழிற்சங்கங்கள் தனியாகவும், அண்ணா தொழிற்சங்க பேரவை தனியாகவும் வேலைநிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்தன. இதையடுத்து சென்னையில் போக்குவரத்துக் கழக தொழிற்சங்சம், தொழிலாளர் நலத்துறை, போக்குவரத்துத் துறை அதிகாரிகள் இடையே முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் சமரசம் ஏற்படாததால், போக்குவரத்துத் தொழிற்சங்க நிர்வாகிகள் ஜனவரி 9 ஆம் தேதி முதல் வேலைநிறுத்தத்தை அறிவித்தனர்.
இதையடுத்து போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் கலந்து கொள்ளாமல் பணிக்கு வர வேண்டும் என்று போக்குவரத்துத்துறை உத்தரவிட்டது. ஆனால், திட்டமிட்டபடி ஜனவரி 9-ம் தேதி முதல் வேலைநிறுத்தம் நடைபெறும் என போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்தன.
இதையும் படியுங்கள் : “நீண்ட இடைவெளிக்குப் பிறகு இருவரும் இணைந்து நடித்தால் என்ன ஆகும்!”
போக்குவரத்துத்துறையின் உத்தரவு எந்த வகையிலும் வேலைநிறுத்தத்தை பாதிக்காது என்றும், பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கம் பாதிக்கப்படக்கூடாது என கருதும் அரசு தொழிற்சங்கத்தினரை அழைத்து பிரச்னைகளை பேசி தீர்க்க முன்வரவேண்டும் என்றும், வேலைநிறுத்த போராட்டத்தை திரும்பப் பெறும் எண்ணம் இல்லை என்றும் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், ஜனவரி 5 ஆம் தேதி சென்னை பல்லவன் சாலையில் உள்ள பல்லவன் இல்லத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ள போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தார். தொமுச, அண்ணா தொழிற்சங்கம் உட்பட அனைத்து முக்கிய தொழிற்சங்கத்தினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.
பொங்கலுக்கு முன்பாக, 15-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ள குழுவை அமைத்து அதிகாரப்பூர்வ அரசாணை வெளியிடப்பட வேண்டும், ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்களின் அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் ஆகிய இரண்டு கோரிக்கைகளை முன்வைத்து தொழிற்சங்கங்கள் இன்றைய பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளன.
இது தோல்வியில் முடிவடைந்த நிலையில், இன்று (ஜன.7) மீண்டும் பேச்சு வார்த்தை நடைபெற உள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் நல்ல முடிவு எட்டப்பட்டு வேலைநிறுத்த அறிவிப்பு வாபஸ் பெறப்படுமா? என்ற பெரும் எதிர்பார்ப்பு பொதுமக்களிடையே ஏற்பட்டு உள்ளது. மேலும் அமைச்சருடனான பேச்சு வார்த்தையில் குறைந்தபட்ச கோரிக்கைகளாவது நிறைவேற்றப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகள் இடையே நிலவுகிறது.