அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு - இன்று தீர்ப்பு.!
அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு இன்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளிக்க உள்ளது.
சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ், கடந்தாண்டு ஜூன் 14ல் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது. இந்த வழக்கில் ஜாமின் கேட்டு, மூன்றாவது முறையாக அமைச்சர் செந்தில் பாலாஜி சார்பில் சென்னை முதன்மை செசன்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
ஜாமின் வழங்க எதிர்ப்பு தெரிவித்து, அமலாக்கத்துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி எஸ். அல்லி முன், நேற்று முன் தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது, செந்தில் பாலாஜி தரப்பில், டில்லி மூத்த வழக்கறிஞர் ஆரியமா சுந்தரம் அமலாக்கத்துறை சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல் சுந்தரேசன் சிறப்பு வழக்கறிஞர் என். ரமேஷ் ஆஜராகினர்.
இதனைத் தொடர்ந்து வாதங்களை முன்வைத்த கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ ஆர் எல் சுந்தரேசன் வருமானவரித்துறை அதிகாரிகளை மனுதாரர் உள்ளிட்டோர் தாக்கியுள்ளனர். வருமான வரி கணக்கு தாக்கல் செய்தால், அந்த பணம் முறையாக சம்பாதித்தது என்று அர்த்தம் இல்லை. வருமான ஆதாரம் குறித்து விளக்கப்படவில்லை. இலாகா இல்லாத அமைச்சராக அவர் தொடர்கிறார்.
இரு தரப்பு வாதங்களை அடுத்து ஜாமின் மனு மீது இன்று உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிபதி எஸ். அல்லி தெரிவித்தார். இந்நிலையில் இன்று உத்தரவு பிறப்பிக்கபட உள்ளது.