சிறுமி லியாவின் உடலுக்கு அமைச்சர் பொன்முடி அஞ்சலி!
விக்கிரவாண்டியில் உயிரிழந்த சிறுமி லியா லஷ்மி உடலுக்கு வனத்துறை அமைச்சர் பொன்முடி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள தனியார் பள்ளி கழிவுநீர் தொட்டியில் விழுந்து நேற்று சிறுமி லியா லட்சுமி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. ஆனால் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இதுதொடர்பாக பள்ளி தாளாளர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இன்று முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் குழந்தையின் உடலுக்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. தொடர்ந்து குழந்தையின் உடல் பிரேத பரிசோதனை முடிந்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. குழந்தையின் உடலை வாங்கிய உறவினர்கள் கதறி அழுதனர்.
இந்நிலையில் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு வீட்டில் வைக்கப்பட்டுள்ள குழந்தை லியா லஷ்சுமி உடலுக்கு வனத்துறை அமைச்சர் பொன்முடி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். பின்னர் அரசு அறிவித்த மூன்று லட்ச ரூபாய்க்கான காசோலையை வழங்கினார். சிறுமி உயிரிழந்த நிலையில் அசம்பாவிதங்களை தவிர்க்க தனியார் பள்ளியில் முன்பு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். வெளி ஆட்கள் பள்ளிக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.