மேட்டூர் அணையின் நீர்மட்டம் 88.12 அடியாக உயர்வு!
கர்நாடகா, கேரள மாநிலங்களில் பெய்துவரும் தொடர்மழையால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 88.120 அடியாக உயர்ந்துள்ளது.
தென்மேற்கு பருவமழை காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும், கேரள மாநிலத்திலும் தீவிரம் அடைந்துள்ளது. இந்த தொடர்மழை காரணமாக காவிரி மற்றும் அதன் துணை நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக காவிரியின் முக்கிய துணை நதியான கபினியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, கர்நாடகாவில் உள்ள கபினி அணை நிரம்பியது.
மேலும் காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கேஆர்எஸ் அணையும் நிரம்பும் நிலையை எட்டியுள்ளது. இதனையடுத்து பாதுகாப்பு காரணமாக இந்த இரு அணைகளிலிருந்தும் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்து விட்டுள்ளது கர்நாடக அரசு. இதனால் தமிழ்நாட்டின் அணைகளிலும் நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், இன்று மாலை 4 மணி நிலவரப்படி அணையின் 87.72 அடியாக இருந்த நீர்மட்டம் தற்போது 88.120 அடியாக உயர்ந்துள்ளது. மேலும், அணைக்கான நீர்வரத்து 34,690 கன அடியில் இருந்து 33,849 கன அடியாக குறைந்துள்ளது. அணையின் நீர் இருப்பு 50.529 டிஎம்சியாக உள்ளது. குடிநீர் தேவைக்காக அணையிலிருந்து வினாடிக்கு 1,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.