சென்னை மாநகராட்சி பட்ஜெட்: பெண்களுக்கு உடற்பயிற்சி கூடம், மாணவர்களுக்கு இலவசமாக ஷூ, சாக்ஸ்!
03:03 PM Feb 21, 2024 IST
|
Web Editor
Advertisement
சென்னை மாநகராட்சி பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில் வார்டுதோறும் பெண்களுக்கான பிரத்யேக உடற்பயிற்சி கூடம், மாநகராட்சிப் பள்ளியில் எல்கேஜி முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு இலவசமாக ஷூ மற்றும் சாக்ஸ் வழங்கப்படும் என அறிவிப்பட்டுள்ளது.
Advertisement
சென்னை மாநகராட்சிக்கான 2024 – 25ம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் தமிழ்த்தாய் வாழ்த்துடன் இன்று தொடங்கியது. இந்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் மொத்தம் 82 புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.
அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:
- சென்னை மாநகராட்சியில் 200 வார்டுகளில் வசிக்கும் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் பொருட்டு மேயர் சிறப்பு மேம்பாட்டு நிதி ரூ.2 கோடியில் இருந்து ரூ.3 கோடியாக உயர்த்தப்படும்.
- கவுன்சிலர்களுக்கு வார்டு மேம்பாட்டு நிதி ரூ.40 லட்சத்தில் இருந்து ரூ.45 லட்சமாக உயர்த்தப்படும்.
- வார்டுகளில் உள்ள பணிகளை மேம்படுத்தவும், காகிதமில்லா நடைமுறையினை கொண்டு வருவதற்கும் ரூ.1 கோடி மதிப்பீட்டில் 200 கவுன்சிலர்களுக்கும் டேப் வழங்கப்படும்.
- வருவாய் துறையில் வழங்கப்படும் மதிப்பீட்டு ஆணைகளான புதிய மற்றும் கூடுதல் சொத்துவரி, மதிப்பீடு சொத்துவரி பெயர் மாற்றும், திருத்தம், புதுப்பிக்கும் தொழில் உரிமங்கள் கியூ ஆர் கோடு தொழில்நுட்பத்தில் வழங்கப்படும்.
- சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட சாலையோரங்கள், திறந்த வெளிகள், பூங்காக்களில் 2.50 லட்சம் மரக்கன்றுகளை தன்னார்வர்கள் மூலம் நடப்பட்டு அவைகளை முறையாக பராமரித்து பேணி காக்கப்படும். இதன் மூலம் நகரின் மாசு கட்டுப்படுத்தப்படும்.
- பக்கிங்காம் கால்வாயை ஒட்டியுள்ள பகுதியில் நாவலர் நகர்-லாக்நகர், வாலாஜா காலணியில் இருந்து பாரதி சாலை, பாலாண்டியம்மன் கோவில் தெரு, சிங்காரவேலர் பாலத்தில் இருந்து-கைலாசபுரம் பாலம், பக்கிங்காம் கால்வாய் தெரு முண்டகக் கண்ணியம்மன் பாலம், பேங்க்ரோடு மயிலாப்பூர் பாலம், மந்தைவெளி பாலம் (இரண்டு பக்கமும்), சாலையோர பூங்காக்களை அழகுப்படுத்தும் பணி ரூ.4.33 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.
- சென்னையில் ஆண்களுக்கு உடற்பயிற்சி கூடம் பயன்பாட்டில் இருப்பது போல பெண்களுக்கான பிரத்யேக உடற்பயிற்சி கூடம் எதுவும் இல்லை என்ற குறையை போக்க ஒரு வார்டுக்கு ஒன்று வீதம் பெண்களுக்கான உடற்பயிற்சி கூடம் 200 வார்டுகளிலும் ரூ.10 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
- சென்னை மாநகரில் உள்ள 8 நீர்நிலைகள் ரூ.10 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்படும். இதன் மூலம் நிலத்தடி நீர்மட்டமும் உயரும். மாத்தூர் எம்.எம்.டி.ஏ. காலனியில் உள்ள குளத்தினை பரிச்சார்ந்த முறையில் ரூ.8 கோடி மதிப்பீட்டில் ஸ்பான்ச் பார்க் வடிவமைக்கப்படும்.
- மேலும் மாநகராட்சி பூங்காக்களில் ஸ்பான்ச் பார்க் அமைக்க ஆய்வு செய்து விரிவான திட்ட அறிக்கை தயாரித்து அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
- மாநகராட்சியால் 192 மயான பூமிகள் பராமரிக்கப்படுகிறது. இறுதி சடங்குகளில் கலந்து கொள்ளும் உற்றார் உறவினர்கள் மன அமைதியுடன் இருக்கைகளில் அமர்ந்து மன நிறைவுடன் இறுதி அஞ்சலி செலுத்தும் வகையில் மயான பூமிகள் ரூ.10 கோடி செலவில் நவீனப்படுத்தப்படும்.
- 255 சென்னை பள்ளிகளுக்கு தலா 4 கேமராக்கள் வீதம் ரூ.7.64 கோடி மதிப் பீட்டில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும். எல்.கே.ஜி. முதல் 5-ம் வகுப்பு படிக்கும் 64,022 மாணவர்களுக்கு ஒரு செட் ஷூ மற்றும் 2 செட் சாக்ஸ் முதல் முறையாக வழங்கப்படும்.
- சென்னை பள்ளிகளில் படிக்கும் 1 லட்சத்து 20 ஆயிரம் மாணவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும். மேலும் 11-ம் வகுப்பில் சேரும் 50 மாணவர்களை இஸ்ரோ மும்பை பாபா அணு ஆராய்ச்சி மையம், கூடங்குளம் அணுமின் நிலையம் போன்ற இடங்களுக்கு சுற்றுலா அழைத்து செல்லப்படும்.
- மழலையர் வகுப்புகளில் இரண்டாம் ஆண்டு (யு.கே.ஜி.) பயின்று வரும் 5,944 மாணவ-மாணவிகளுக்கு மழலையர் வகுப்பை நிறைவு செய்வதற்கான பட்டமளிப்பு விழா நடத்தப்படும்.
- புதிதாக 7 நாய் பிடிக்கும் வாகனம் கூடுதலாக கொள்முதல் செய்து நாய்களை பிடித்து கருத்தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். தெரு நாய்களுக்கு ஏற்படும் வெறி நாய் கடி நோய் பாதிப்பில் இருந்து பாதுகாக்க 3 வட்டாரங்களில் கால்நடை தடுப்பூசி மருந்து செலுத்தும் வாகனங்கள் ரூ.60 லட்சத்தில் வாங்கப்படும்.
- மாடுகளை முறைப்படுத்த மாட்டு தொழுவங்களுக்கு உரிமம் வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். மேலும் கூடுதலாக 2 நாய் இனக் கட்டுப்பாட்டு மையங்கள் ரூ.2.50 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்படும் என்பது உள்ளிட்ட 82 புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.
- மாநகராட்சியின் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் சேதம் அடைந்த சாலைகளில் ஓட்டுப்பணிகள் மேற்கொள்ள ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் நவீன எந்திரம் வாங்கி ஒப்பந்ததாரர் மூலம் பணி மேற்கொள்ளப்படும்.
- மேலும் 4750 சாலைகள் மற்றும் நடைப்பாதைகள் மேம்படுத்தும் பணி ரூ.404 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.
- 2024-2025-ம் நிதியாண்டின் வருவாய் ரூ.4464.60 கோடியாகவும் வருவாய் செலவினம் ரூ.4727.12 கோடியாகவும் இருக்கும். பற்றாக்குறை ரூ.252.52 கோடியாக உள்ளது.
நாளை (பிப்ரவரி 22) பட்ஜெட் மீதான பொது விவாதம் நடைபெறும் என்றும் சென்னை மாநகராட்சி நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
Next Article