தாயின் சடலத்தை சைக்கிளில் கட்டி எடுத்து சென்ற மகன்! நெல்லையில் ஒரு பாசப்போராட்டம்.. நடந்தது என்ன?
நெல்லையில் உடல் நலக்குறைவால் உயிரிழந்த தாயின் உடலை அரசு மருத்துவமனையில் இருந்து மனநலம் பாதிக்கப்பட்டிருந்த மகன் சைக்கிளில் 25 கி.மீ தூரம் எடுத்து சென்ற சம்பவம், மனம் உருக செய்துள்ளது.
நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள மீனவன் குளத்தைச் சேர்ந்தவர் சிவகாமியம்மாள் (60). இவரது கணவர் பல ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவர்களுக்கு 3 மகன்கள் ஒரு மகள் உள்ளனர். அதில் கடைசி மகன் ஏசுபாலன் (38). இவருக்கு திருமணமாகவில்லை என்பதால் தாயுடன் வசித்து வரும் நிலையில் மற்ற அனைவரும் வெளியூரில் உள்ளனர்.
சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த விபத்தில் சிக்கிய ஏசுபாலனுக்கு தலையில் பலத்த அடிபட்டு அவ்வப்போது ஞாபக மறதி நோய் இருந்து வந்துள்ளது. இதனால் வேலைக்கு செல்ல முடியாத நிலையில் உள்ள ஏசுபாலன் தாயின் ஆதரவில் வசித்து
வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு சிவகாமி அம்மாளுக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டது. ஏசு தனது சைக்கிளில் தாயை நாங்குநேரி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் சிவகாமியம்மாளை நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அறிவுறுத்தியுள்ளனர்.
இதனால், நாங்குநேரி ரயில் நிலையத்திற்கு சென்று தாய் மற்றும் சைக்கிளுடன் ரயிலில் ஏறி நெல்லைக்கு சென்றுள்ளார். செல்லும் வழியில் ரயில்வே போலீசார் சைக்கிளை ரயிலில் ஏற்றி வரக்கூடாது என எச்சரித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து நெல்லை சந்திப்பில் ரயிலில் இருந்து இறங்கிய ஏசு பாலன் தனது தாயை சைக்கிளில் பின்னால் அமர்த்தி கொண்டு நடந்தே சைக்கிளுடன் சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நெல்லை அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
சிவகாமி அம்மாளின் உடல்நிலை நேற்று (ஜன.24) இரவு மிகவும் மோசமாகி உள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தனது தாயை வெளியே தூக்கிசென்று அருகில் உள்ள கடையில் டீ வாங்கி கொடுத்ததாகவும் சிறிது நேரத்தில் தாய் இறந்து விட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இதனையடுத்து யாரை தொடர்பு கொள்வது? எப்படி தனது தாயின் உடலை வீட்டுக்கு கொண்டு செல்வது என குழப்பம் அடைந்த ஏசு பாலன் தான் கொண்டு வந்த சைக்கிளின் பின்னால் இறந்த தாயின் உடலை தூக்கி வைத்து மூட்டையைப் போல துணியால் மூடி கயிற்றால் கட்டி மீண்டும் நடந்தே சைக்கிளுடன் ஊருக்கு சென்றுள்ளார்.
மருத்துவமனையில் இருந்து நெல்லை நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலை வழியாக சுமார் 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மூன்றடைப்பு ரயில்வே மேம்பாலத்தில் சைக்கிளில் இறந்த தாயின் உடலுடன் ஏசு பாலன் வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மூன்றடைப்பு போலீசார் சைக்கிளை நிறுத்தி அதில் பெண் உடல் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து விசாரணை நடத்தியுள்ளனர்.
அப்போது, ஞாபக மறதி மற்றும் மனநிலை பாதிக்கப்பட்ட ஏசு பாலன் அரைகுறையான தகவல்களுடன் நெல்லை அரசு மருத்துவமனையில் இருந்து வருவதாக தெரிவித்துள்ளார். இதனிடையே நெல்லை அரசு மருத்துவமனையில் உள்ள புறக்காவல் நிலையத்தில் சிவகாமியம்மாளை காணவில்லை என மருத்துவர் நிர்வாகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அதன்பின் சிவகாமி அம்மாளின் உடலை கைப்பற்றிய மூன்றடைப்பு போலீசார் நெல்லை அரசு மருத்துவமனைக்கு மீண்டும் அனுப்பி வைத்துள்ளனர். அதனை தொடர்ந்து போலீசார் சிவகாமி அம்மாளின் மற்ற மகன்கள் மற்றும் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
நெல்லை அரசு மருத்துவமனையில் பாதுகாப்பையும் மீறி ஒரு நோயாளி மருத்துவமனையை விட்டு வெளியே தூக்கி செல்லும் வரை என்ன செய்து கொண்டு இருந்தார்கள் என்பது பெரும் பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தி உள்ளது. மேலும் நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட பாளையங்கோட்டை மாநகரப் பகுதியில் பாதுகாப்பில் இருந்த போலீசார் சைக்கிளில் உடல் கொண்டு செல்வதை எப்படி கவனிக்காமல் இருந்தார்கள் என்பது போன்ற பல்வேறு கேள்விகளை பொதுமக்கள் எழுப்பி வருகின்றனர்.