“பெண்களை போல் ஆண்களுக்கும் இலவச பேருந்து வசதி” - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!
பெண்களுக்கு இலவச பேருந்து போல ஆண்களுக்கும் இலவச பேருந்து வழங்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.
சென்னை கதீட்ரல் சாலையில் அமைந்துள்ள ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி மற்றும் பசுமை
தாயகம் - என்ஜிஓ இணைந்து நடத்தும் காலநிலை நீதியும், பாலின சமநிலை குறித்தான
கருத்தரங்கம் ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் நடைபெற்றது. இதில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு மாணவர்களுக்கு காலநிலை மாற்றம் மற்றும் பாலின வேறுபாடுகள் குறித்து சிறப்புரை ஆற்றினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது;
“காலநிலை மாற்றத்தினால் அதிக பாதிப்பு பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் மட்டுமே. இன்றைய காலக் கட்டத்தில் காலநிலை மாற்றம், பருவநிலை மாற்றம் என்பது குறித்த
விழிப்புணர்வு மிக அவசியமான ஒன்று. குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் அவர்களுக்கு இது சம்பந்தமான எந்த ஒரு தகவலும் சேர்வது கிடையாது.
சமீபத்தில் சென்னையில் பெரும் வெள்ளம். இந்த வெள்ளத்தில் நாம் அனைவரும் பாதிக்கப்பட்டு இருக்கின்றோம். தென் மாவட்டங்களில் மிகப்பெரிய அளவில் வெள்ளம் வந்தது. இது தொடர்ச்சியாக வரும் காலத்திலும் வரும். காலநிலை மாற்றத்தின் தாக்கம் வெள்ளம் மட்டும் கிடையாது. வறட்சி, விவசாய பிரச்சனைகள் அதாவது காலநிலை அகதிகள். இது போன்ற பல பிரச்சனைகள் இருக்கின்றன. இது சம்பந்தமாக மாநில அரசும், மத்திய அரசும் இன்னும் தீவிர கொள்கைகளைக் கொண்டு வர வேண்டும்.
மாணவர்கள், இளைஞர்கள் மத்தியிலேயே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். விவசாய நிலங்களை பாதுகாக்க வேண்டும். மரங்கள் அதிகம் நட வேண்டும். வருங்காலங்களில் உணவு தட்டுப்பாடு இருக்கக்கூடும். அடுத்த 5 ஆண்டுகளிலேயே இது வரக்கூடும். இன்றைக்கு அரிசி விலை 12 ரூபாய் விலை ஏற்றி விட்டார்கள். ஏனென்றால், பருவநிலை மாற்றத்தினால் கடந்த ஆண்டு குருவை சம்பா சாகுபடி 4.5 லட்சம் ஏக்கர் கருகிவிட்டது. அதனால் இன்றைக்கு விலைவாசி உயர்வு ஏற்பட்டுள்ளது. இந்த நிலை இன்னும் மோசமாகக்கூடும்.
ஆக்கிரமிப்புகள் அதிகமாக உள்ளது. 75 சதவீதம் நடந்து சென்றவர்கள் தற்போது கார்களில் செல்கின்றனர். நடந்து செல்பவர்களின் எண்ணிக்கை 25 சதவீதமாக குறைந்துள்ளது.
பெண்களுக்கு இலவச பேருந்து போல ஆண்களுக்கும் வழங்க வேண்டும். சுற்றுச்சூழல் மாசுபாட்டால் வருடத்திற்கு பல உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. மற்ற நாடுகளை போன்று தமிழ்நாட்டிலும் பசுமை பூங்காக்கள் நிறைய உருவாக்குங்கள்.”
இவ்வாறு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.