#Meiyazhagan படத்தின் நீளம் குறைப்பு? விமர்சனங்களால் அதிரடி முடிவு?
கார்த்தி நடித்துள்ள மெய்யழகன் திரைப்படத்தில் 18 நிமிட காட்சிகளை படக்குழு நீக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரேம்குமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி – த்ரிஷா நடித்து கடந்த 2018-ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ‘96’. இந்த திரைப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது 6 ஆண்டுகளுக்குப் பின் பிரேம்குமார், நடிகர் கார்த்தியை வைத்து புதிய திரைப்படத்தை இயக்கியுள்ளார். ‘மெய்யழகன்’ என பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படத்தில் நடிகர் அரவிந்தசாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தில் ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரண் போன்றோர் நடித்துள்ளனர். இது கார்த்தியின் 27வது படமாகும். இந்த திரைப்படத்தை 2டி நிறுவனம் தயாரித்துள்ளது. கடந்த செப்.27ம் தேதி திரையரங்குகளில் வெளியான இத்திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது.
இப்படத்தில் இடம்பெற்றுள்ள பல காட்சிகளை ரசிக்கும் படியாக உள்ளதாக ரசிகர்கள் குறிப்பிட்டுள்ளனர். அதே நேரத்தில், படத்தின் நீளம் அதிகமாக இருப்பதாக ரசிகர்கள் குறை கூறிவந்தனர். இந்த நிலையில், 2 மணிநேரம் 57 நிமிடம் ஓடக்கூடிய படத்திலிருந்து 18 நிமிட காட்சிகளை படக்குழு நீக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.