Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மேகதாது அணை விவகாரம்: தமிழ்நாடு சட்டப்பேரவையில்  தீர்மானம் நிறைவேற்ற ராமதாஸ் வலியுறுத்தல்...

02:16 PM Feb 16, 2024 IST | Web Editor
Advertisement

மேகதாது விவகாரத்தில் அத்துமீறும் கர்நாடகத்தைக் கண்டித்தும் தமிழ்நாடு சட்டப் பேரவையில்  தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Advertisement

இது தொடர்பாக அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

காவிரி நீர் மேலாண்மை  ஆணையத்தில் மேகதாது அணைக்கான விரிவான திட்ட அறிக்கை குறித்து விவாதிக்கவும்,  அதனடிப்படையில் மேகதாது அணைக்கு அனுமதி அளிக்கவும் உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்திருக்கிறது.  ஆனால், இதை சற்றும் மதிக்காமல்,  மேகதாது அணை  தொடர்பான விரிவான திட்ட அறிக்கையை ஆய்வு செய்யும் பொறுப்பை மத்திய நீர்வள ஆணையத்திடம் காவிரி மேலாண்மை ஆணையம் அண்மையில் வழங்கியது.  அதற்கு எதிராக தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில்,  மேகதாது அணை கட்டுவதற்கான அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்து விட்டதாக கர்நாடகம் அறிவித்திருக்கிறது.  இதற்குப் பிறகும் கர்நாடகத்தின் அத்துமீறல்களை தமிழ்நாடு  அரசும்,  மத்திய அரசும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது.

சென்னை மாகாணத்திற்கும்,  மைசூர் சமஸ்தானத்திற்கும் இடையே 1924ம் ஆண்டில் கையெழுத்தான  காவிரி நீர்ப் பகிர்வு ஒப்பந்தத்தின்படி,  கர்நாடகத்தில் காவிரியின் குறுக்கே அம்மாநில அரசு அணைகளை கட்ட முடியாது.  காவிரி சிக்கல் தொடர்பாக காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பில்,  கடைமடை பாசன மாநிலமான தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல் காவிரியின் குறுக்கே கர்நாடகம் அணைகளை கட்ட முடியாது என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.  இவ்வளவுக்குப் பிறகும் தமிழகத்தின் அனுமதி இல்லாமல் மேகதாது அணை கட்ட கர்நாடக  அரசு  துடிப்பதும், அதற்கு மத்திய நீர்வள அமைப்புகள் துணை போவதும் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானவை.

மேகதாது அணை கட்டும் கர்நாடக  அரசின் திட்டத்தை நிரந்தரமாகத் தடுப்பதற்கான ஒரே வழி  மேகதாது அணைக்கான வரைவு திட்ட அறிக்கை தயாரிக்க 2018-ஆம் ஆண்டில் மத்திய அரசு அளித்த  அனுமதியை ரத்து செய்வது தான்.  அதை மத்திய அரசு உடனடியாக  செய்வதுடன்,  மேகதாது அணை குறித்த பணிகளை மேற்கொள்ளக்கூடாது என்று கர்நாடகத்தை எச்சரிக்க வேண்டும்.

இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தியும்,  மேகதாது விவகாரத்தில் அத்துமீறும் கர்நாடகத்தைக் கண்டித்தும் தமிழ்நாடு சட்டப்பேரவையில்  தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்”

இவ்வாறு அந்த அறிக்கையில் பாமக நிறுவனர் ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.

Tags :
PMK | Ramadoss | TN Govt | Politics | Mekedatu dam | C M Siddaramaiah | Karnataka assembly | Karnataka | Cauvery | மேகதாதுஅணை |
Advertisement
Next Article