ரூ.51.30 லட்சம் மதிப்புள்ள மருத்துவ உபகரணங்கள் - #GovtStanleyHospital-க்கு அர்ப்பணித்தார் வடசென்னை எம்பி கலாநிதி வீராசாமி!
சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு ரூபாய் 51 லட்சத்து 30 ஆயிரம் மதிப்புள்ள மருத்துவ உபகரணங்கள் வடசென்னை எம்பி கலாநிதி வீராசாமி அர்ப்பணித்தார்.
வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமியின் ஏற்பாட்டில் எம்.ஆர்.எப் (MRF) நிறுவனத்தின் சமூக பொறுப்பு நிதி (CSR) மூலம் ராயபுரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு ரூபாய் 51 லட்சத்து 30 ஆயிரம் மதிப்புள்ள மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டன.
அறுவை சிகிச்சை மைய மேசை, மற்றும் அல்ட்ரா சோனோகிராம் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் முன்னிலையில் மருத்துவ உபகரணங்களை வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி மருத்துவமனை நிர்வாகத்திடம் அர்ப்பணித்தார்.
இந்நிகழ்வில் சென்னை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும் சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.டி. சேகர், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன், ஸ்டான்லி மருத்துவமனை முதல்வர் பாலாஜி, எம்.ஆர்.எப் நிறுவன பொது மேலாளர் ஜேக்கப் சாக்கோ, ஜோசப் வி செரியன் (Deputy Plant Head MRF), என்.நந்தகுமார் (PRO MRF) ஜி.கஜேந்திரன் (CSR Coordinator MRF) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.