மக்களவை தேர்தலில் தனி சின்னத்தில் போட்டியிட மதிமுக முடிவு!
மக்களவை தேர்தலில் மதிமுக தனி சின்னத்தில் போட்டியிட உள்ளதாக நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகக்குழு அவசரக் கூட்டம்
சென்னை எழும்பூர் உள்ள தலைமை அலுவலகத்தில் கழக அவைத்தலைவர் ஆடிட்டர் ஆ.
அர்ஜூனராஜ் தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் உயர்நிலைக்குழு, மாவட்டச் செயலாளர்கள், ஆட்சிமன்றக்குழு, தணிக்கைக்குழு, அரசியல் ஆலோசனைக்குழு, அரசியல் ஆய்வு மையம் குழு என பல்வேறு அமைப்புக்களின் செயலாளர்கள் மற்றும், குழுக்களின் உறுப்பினர்கள் மற்றும் அணிகளின் செயலாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். திமுக-வுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடர்ந்து இழுபறியாக தொடர்வதால் அதற்கான ஒரு முடிவு எடுக்க இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில், தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் இயங்கி வரும்
இந்தியா கூட்டணி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் வெற்றி
கொடி நாட்ட வேண்டும் என்பதில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் உறுதியாக
இருக்கிறது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தலில் மதிமுக பம்பரம் சின்னத்தில் போட்டியிட இருப்பதாக அக் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டாக்டர் ரொஹையா தெரிவித்துள்ளார். பம்பரம் சின்னம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டாலும் மதிமுக க்கு என தனி சின்னம் பெற்று அதில் தான் போட்டியிடுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும், மக்களவை தொகுதி ஒன்று & மாநிலங்களவை ஒன்று தருவதாக திமுக ஒத்துக்கொண்டதாகவும், இது தொடர்பாக ஒப்பந்தம் நாளை கையெழுத்தாக வாய்ப்பு உள்ளது என்றும் டாக்டர் ரொஹையா தெரிவித்துள்ளார்.