ஆஞ்சியோ முடிந்து வீடு திரும்பிய நாளன்றே பணிக்கு சென்ற மயிலாடுதுறை ஆட்சியர் - நெகிழ்ச்சி சம்பவம்!
நெஞ்சு வலி காரணமாக ஆஞ்சியோ சிகிச்சை செய்துகொண்ட மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர், ஊர் திரும்பிய நாளன்றே மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பங்கேற்றார். இந்த சம்பவம் பொதுமக்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 2023-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அம்மாவட்டத்தின் 3வது ஆட்சியராக ஏ.பி.மகாபாரதி பொறுப்பேற்று பணியாற்றி வருகிறார். மாவட்டத்திற்கு தேவையான பல்வேறு வளர்ச்சி திட்டங்களை சிறப்பாக செய்துவரும் மகாபாரதி, கடந்த ஜூன் 26-ம் தேதி மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.
பின்னர் அன்று மதியம் முகாம் அலுவலகத்துக்கு சென்ற அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. இதனால், தஞ்சாவூர் மற்றும் சென்னையில் சிகிச்சை பெற்ற அவருக்கு ஜூன் 27-ம் தேதி இதயக் குழாயில் ஏற்பட்டிருந்த 3 அடைப்புகளின் காரணமாக ஆஞ்சியோகிராம் சிகிச்சை செய்யப்பட்டது.
தொடர்ந்து, அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, “உங்கள் பிரார்த்தனைதான் என்னைக் காப்பாற்றியது. நான் இப்போது நலமாக உள்ளேன். உங்கள் அனைவருக்கும் நன்றி” என்று கூறினார். சிகிச்சை முடிந்து ஊர் திரும்பிய நாளன்றே ஓய்வெடுக்காமல் மாவட்ட ஆட்சியர் பணியில் சேர்ந்து பணியாற்றிய சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.