Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“47-வது சென்னை புத்தகக் காட்சி பெரும் வெற்றி அடையட்டும்!” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

05:42 PM Jan 03, 2024 IST | Web Editor
Advertisement

47-வது சென்னை புத்தகக் காட்சி பெரும் வெற்றி அடையட்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துரை வெளியிட்டுள்ளார்.

Advertisement

பபாசி சாா்பில் சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெறவுள்ள 47-ஆவது சென்னை புத்தகக் காட்சியை இன்று மாலை 4.30 மணிக்கு தொடங்கி வைத்து,  கலைஞா் பொற்கிழி விருதுகள்,  பபாசி வழங்கும் விருதுகள் ஆகியவற்றை வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றுவார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க முடியாததால், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புத்தகக் காட்சியை திறந்து வைத்தார்.  அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மற்றும் அமைச்சர் மா. சுப்பிரமணியன் உடனிருந்து புத்தக காட்சியை பார்வையிட்டனர்.  தொடர்ந்து,  கலைஞா் பொற்கிழி விருதுகள்,  பபாசி வழங்கும் விருதுகள் ஆகியவற்றை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

இந்நிலையில்,  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துரையை வெளியிட்டுள்ளார்.  அந்த வாழ்த்துரையில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழ்நாட்டின் மிகப்பெரிய அறிவுத் திருவிழாவான சென்னை புத்தகக் காட்சியை நேரில் வந்து தொடங்கி வைக்க இருந்த நிலையில்,  தவிர்க்க இயலாத காரணங்களால் அது இயலாமல் போனதற்கு வருந்துகிறேன்.  47-ஆவது சென்னை புத்தகக் காட்சி நிகழ்வு மிகப் பெரும் வெற்றியடையவும் அதிக அளவிலான புத்தகங்கள் விற்பனையாகவும் வாழ்த்துகிறேன்.

இன்னும் சில ஆண்டுகளில் 50-ஆவது ஆண்டு புத்தகக் கண்காட்சி நடைபெறப்போகிறது. இது வாசிப்பின் மீதும் அறிவு தேடலின் மீதும் பற்று கொண்டு பகுத்தறிவாலும் முற்போக்குச் சிந்தனையாலும் தமிழ்ச் சமூகம் முன்னோக்கி நடைபோடுவதன் அடையாளம்.  எனவே அந்தப் பணியைத் தொடர்ந்து மேற்கொண்டு வரும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர் சங்கத்துக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

புத்தகம் வெளியிடுவது,  பதிப்பிப்பது, விற்பனை செய்வது என்பது மற்றுமொரு தொழில் அல்ல.  இது அறிவுத்தொண்டு ! தமிழாட்சியும் தமிழர்களின் ஆட்சியும் நடைபெறும் நம்முடைய தமிழ்நாட்டில் இத்தகைய அறிவுத் திருவிழாக்கள் தமிழ்த் திருவிழாக்கள் அதிகம் நடக்க வேண்டும்.  அதற்கு ஊக்கமளிக்கும் வகையில்தான் படைப்பாளர்களுக்கு உற்ற தோழராக விளங்கிய கருணாநிதியின் நூற்றாண்டான இந்த ஆண்டு பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியின்,  உமா மகேசுவரி,  தமிழ்மகன்,  அழகிய பெரியவன்,  வேலு. சரவணன்,  மயிலை பாலு ஆகியோர் இந்த ஆண்டுக்கான கலைஞர் பொற்கிழி விருதைப் பெற்றிருக்கிறார்கள்.  அவர்களுக்கும் பபாசியின் விருது பெற்றுள்ள பிற படைபாளிகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகள்.

வாசிப்புப் பழக்கம் என்பது ஒரு தனிமனிதரின் அறிவுத்திறத்தின் அடையாளம் மட்டுமல்ல, ஒரு சமூகம் மாநிலம் நாடு எந்த அளவு வளர்ந்துள்ளது என்பதற்கான - அடையாளம். அறிவாற்றலை வாழ்நாளெல்லாம் பெற மனிதருக்குத் துணைநிற்கும். புத்தகங்களைப் போற்றுகின்ற அரசாக நமது திராவிட மாடல் அரசு இருக்கிறது.  அதனால்தான் கருணாநிதி சென்னையில் அண்ணா நூற்றாண்டு நூலகம் உருவாக்கினார்.  நாம் மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நினைவு நூலகம் உருவாக்கியுள்ளோம்.  புத்தகங்கள் மேல் எத்தகைய ஆர்வமும் அக்கறையும் கொண்டவர்கள் நாங்கள் என்பதற்கு இது ஒரு சிறிய எடுத்துக்காட்டு.

தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமை,  எழுத்தாளர்கள் பிறந்தநாளில் கூட்டங்கள், குறைந்த விலையில் சங்க இலக்கிய நூல்கள் வெளியீடு,  திராவிடக் களஞ்சியம் உருவாக்கம்,  ஊடகவியலாளர்களுக்குக் கலைஞர் எழுதுகோல் விருது,  உலகப் பல்கலைக்கழகங்களில் செம்மொழித் தமிழ் இருக்கைகள்,  நூலகங்களுக்குச் சிற்றிதழ்கள், இலக்கிய மாமணி விருதுகள்,  உயரிய விருது பெற்ற எழுத்தாளர்களுக்குக் கனவு இல்லம், திசைதோறும் திராவிடம்,  முத்தமிழறிஞர் மொழிபெயர்ப்புத் திட்டம் என்று ஏராளமான தமிழ்க் காப்புத் திட்டங்களை இன்றைய திராவிட முன்னேற்றக் கழக அரசு செயல்படுத்தி வருகிறது.  தமிழ்நாடு பாடநூல் கல்விக் கழகமும் ஏராளமான புத்தகங்களை வெளியிட்டு விற்பனை களத்தில் உயர்ந்து நிற்கிறது.

புத்தகம் வாசிக்கும் வழக்கத்தை மக்கள் இயக்கமாக மாற்றுவதற்காகச் சென்னை புத்தகக் காட்சியைப் போல தமிழ்நாட்டின் எல்லா மாவட்டங்களிலும் கடந்த ஆண்டு முதல் புத்தகக் கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.  அடுத்ததாகத் தமிழ்நாடு அரசு எடுத்த மிக முக்கியமான முயற்சி என்பது பன்னாட்டுப் புத்தகக் கண்காட்சி. உலகளாவிய அறிவுப் பரிமாற்றத்தை நோக்கமாகக் கொண்டு நமது செழுமையான தமிழ் இலக்கியப் படைப்புகளை உலகம் முழுக்க எடுத்துச் செல்லவும் சிறந்த பன்னாட்டு அறிஞர்கள் மற்றும் எழுத்தாளர்களின் படைப்புகளைப் பெற்று தமிழில் அவற்றை வழங்கவும் நடத்தப்படுகிற இந்தப் பன்னாட்டு புத்தகக் கண்காட்சியில் இந்த ஆண்டு 38 நாடுகள் பங்கேற்க இருக்கின்றன.

வருகிற 16, 17, 18 ஆகிய நாட்களில் நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் 6  கோடி ரூபாய் செலவில் இது நடைபெற இருக்கிறது.  ஆங்கில எழுத்துலகத்தில் இருப்பதைப் போலவே 20 இலக்கிய முகவர்களைப் பயிற்சி கொடுத்து தமிழ்நாடு அரசு உருவாக்கி இருக்கிறது.  எழுத்தாளர்களுக்கும் வெளிநாட்டுப் பதிப்பு நிறுவனங்களுக்குமான பாலமாக இந்த இலக்கிய முகவர்கள் இருப்பார்கள்.  தமிழ்ப் படைப்புகள் உலகின் பிற மொழிகளுக்குக் கொண்டு செல்லப்படும்.  இந்தியாவில் எந்த மொழிக்கும் இப்படி இலக்கிய முகவர்கள் இல்லை என்கிற அளவில் இந்த முயற்சியை நாம் மேற்கொண்டு வருகிறோம்.

அதேபோல் கடந்த ஆண்டு தமிழ்நாடு அரசு எடுத்த இன்னொரு மிக முக்கியமான முன்னெடுப்பு என்பது இலக்கியத் திருவிழாக்கள்.  சென்னை,  பொருநை,  சிறுவாணி, காவிரி,  வைகை என இலக்கியத் திருவிழாக்கள் தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடத்தப்பட்டு வருகின்றன.  இளைஞர்களின் படைப்பாற்றலை ஊக்குவிக்கும் வகையில் இந்த ஆண்டு முதல் இளைஞர் இலக்கியத் திருவிழாவும் நடத்தப்பட இருக்கிறது. இலக்கியம் என்பது இயக்கமாக மாற வேண்டும்.  மனிதரின் அன்றாட பழக்கமாக வாசிப்புப் பழக்கம் இருக்க வேண்டும்.  புத்தகங்களைப் பரிமாறிக் கொள்வதை ஒரு இயக்கமாகவே நான் உருவாக்கி இருக்கிறேன்.  எனக்கு அன்பளிப்பாக வழங்கப்படும் புத்தகங்களை கிராமப்புற நூலகங்களுக்கும் வாசக சாலைகளுக்கும் வழங்குவதை நான் வழக்கமாக வைத்துள்ளேன்.

புத்தகம் வழங்குவது என்பதுதான் அறிவுக்கொடையாக அமையும்.  புத்தகங்கள் வாங்குகிற பழக்கத்தை, நூலகங்களுக்குச் செல்கிற பழக்கத்தைப் பள்ளிக்காலத்திலேயே மாணவர்களிடம் ஏற்படுத்த வேண்டும். புதிய சிந்தனைகளை கல்லூரி மாணவர்களிடம்
உருவாக்க வேண்டும். இது தமிழ்ப்பற்றை, தமிழார்வத்தை, தமிழுணர்ச்சியை, தமிழ் எழுச்சியை உருவாக்கும்.

சின்னச்சாமியும் அரங்கநாதனும் தீக்குளித்தார்கள்.  சிதம்பரம் ராசேந்திரன் துப்பாக்கிக் குண்டுக்கு மார்பைக் காட்டினார்.  லட்சக்கணக்கான தமிழர்கள் பட்டுக்கோட்டை அழகிரிசாமி அவர்களின் தலைமையில் திருச்சியில் இருந்து சென்னைக்குத் தமிழ்ப்படையாக நடந்து போனார்கள்.  இவையெல்லாம் வேறு எந்த மொழியிலும் இனத்திலும் நாட்டிலும் பார்ப்பது அரிது.  இத்தகைய தியாகத்தை இப்போது எதிர்பார்க்கவில்லை.  தமிழார்வத்தைத்தான் எதிர்பார்க்கிறோம்.  இத்தகைய தமிழ் ஆர்வத்தை உருவாக்குபவையாகப் புத்தகக் காட்சிகள் செயல்பட்டு வருகின்றன.  தமிழினம் சிறக்க வேண்டுமானால் தமிழ்மொழி சிறக்க வேண்டும்! தமிழ்மொழி செழிக்குமானால் தமிழினம் செழிக்கும்! தமிழ்மொழியும் இனமும் செழிக்கப் புத்தகங்கள் துணைநிற்கட்டும்! 47-ஆவது சென்னை புத்தகக் காட்சி பெரும் வெற்றி அடையட்டும்!

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது வாழ்த்துரையில் தெரிவித்துள்ளார்.

Tags :
@Anbil_MaheshBook Expo 2024Book FairBook FestivalChennaiDMKMKStalinnews7 tamilNews7 Tamil UpdatesSubramanian_maUdhaystalin
Advertisement
Next Article