‘மே மாதத்திற்கான பருப்பு, எண்ணெய்யை ஜூன் இறுதிவரை பெறலாம்’ - உணவுத்துறை அதிகாரிகள் தகவல்!
நியாய விலை கடைகளில் தங்கு தடையின்றி துவரம் பருப்பு மற்றும் பாமாயில் வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக உணவுத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு முழுவதும் ரேஷன் கடைகளில் மே, ஜூன் ஆகிய இரண்டு மாதத்திற்கான துவரம் பருப்பு, பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் விநியோகிக்கப்படவில்லை என தொடர்ச்சியாக புகார்கள் பெறப்பட்டு வருகிறது. நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றதையொட்டி டெண்டர் கோருவதில் தாமதம் ஏற்பட்டதாகவும், அதன் காரணமாகவே துவரம் பருப்பு, பாமாயில் விநியோகத்தில் தாமதம் ஏற்பட்டதாகவும் உணவுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்
இதனையடுத்து மே மாதத்திற்கான பாமாயில், துவரம் பருப்பு பெறாத ரேஷன் அட்டைதாரர்கள் ஜூன் முதல் வாரம் வரை அதனை பெற்றுக் கொள்ளலாம் என ஏற்கனவே உணவுத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் மே மாததிற்கான பொருட்களை ஜூன் இறுதி வரை பெற்றுக் கொள்ளலாம் என உணவுத்துறை அதிகாரிகள் தரப்பில் தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது