மாதவிடாய் கால விடுப்பு குறித்த ஸ்மிருதி இரானி கருத்துக்கு மாதர் தேசிய சம்மேளனம் கண்டனம்!
பெண்களுக்கு பணியிடங்களில் ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுமுறையை கட்டாயமாக்குவது தேவையற்றது என மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறிய கருத்துக்கு இந்திய மாதர் தேசிய சம்மேளனம் கண்டனம் தெரிவித்துள்ளது.
மாதவிடாய் காலங்களில் பெண்கள் எதிர்கொள்ளும் நெருக்கடி காரணமாக, ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பாக மாநிலங்களவையில் பேசிய மத்திய மகளிர் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, “மாதவிடாய் சுழற்சி என்பது குறைபாடல்ல. அது இயல்பானதே. எனவே பெண்களுக்கு பணியிடங்களில் ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுமுறையை கட்டாயமாக்குவது தேவையற்றது” என்று கூறினார்.
இதற்கு பல்வேறு அமைப்புகளும், அரசியல் தலைவர்கள் தங்களது கண்டனங்கள் தெரிவித்து வந்த நிலையில், இந்திய மாதர் தேசிய சம்மேளனமும் தங்களது கண்டனத்தை பதிவு செய்துள்ளது.
இது தொடர்பாக சம்மேளனத்தின் மாநில செயலாளர் மு.கண்ணகி வெளியிட்ட அறிக்கை:
"ஊதியத்துடன் கூடிய மாத விடாய் கால விடுப்பு மாணவர்கள், தொழிலாளர்கள் என அனைத்து தரப்பினருக்கும் அத்தியாவசியமானது. உளவியல் ரீதியாகவும், உடல் ரீதியாகவும் மிக சோர்வையும் பலவீனத்தையும் ஏற்படுத்தக் கூடிய மாதவிடாய், இயற்கை உயிரியல் நிகழ்வு என்பது உண்மை தான்.
ஆனால் பெண்களின் ஹார்மோன்களின் சுரப்பு, உணவு முறைகள், ரத்த அணுக்களின் எண்ணிக்கை, உடல்வாகு போன்றவற்றால் ஏற்படும் சீரற்ற மாதவிடாயால், அதிக வலியுணர்வு, வாந்தி, மயக்கம் போன்ற உடல் உபாதைகளும் ஏற்படும். இத்தகைய உடலியல் சிரமங்களை தாங்கி பெண்கள் வேலை செய்ய வேண்டும் என்பது சமூகத்தில் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும்.
ஐரோப்பிய நாடுகளில் ஸ்பெயின் இதற்கு ஒரு முன்னுதாரணமாக திகழ்ந்து, அதற்கான தனிச் சட்டங்களை இயற்றி 1947 முதல் நடைமுறைப் படுத்தி வருகிறது. கிழக்கு ஆசிய நாடுகள் பலவும் மாதவிடாய் காலத்தில் ஊதியத்துடன் 3 முதல் 5 நாட்கள் வரைவிடுப்பு வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவிலும் கூட கேரளா, பீஹார் மாநிலங்களிலும் மாதவிடாய் காலவிடுப்பு நடைமுறையில் உள்ளது.
பெண்கள் உயிருள்ள, உணர்வுள்ள, உரிமையுள்ள மனித குலத்தின் அடிப்படை சக்தி. இந்நாட்டில் பெண்களை அடிமையாக்கி வேலை செய்ய நிர்பந்திப்பதை ஏற்க முடியாது. மத்திய அமைச்சர் மாதவிடாய் உடல் ஊனமாக கருதி விடுமுறை அவசியமில்லை என்று கூறியிருப்பதை வன்மையாக கண்டிக்கிறோம். அதேபோல மாதவிடாய் நாட்களில் 3 முதல் 5 நாட்கள் விடுமுறையளிக்கும் வகையில் மத்திய அரசு சட்டம் இயற்ற வேண்டும்." இவ்வாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.