கொல்கத்தா ஹோட்டலில் பயங்கர தீ விபத்து - குழந்தைகள் உட்பட 14 பேர் உயிரிழப்பு!
மத்திய கொல்கத்தாவின் ஃபால்பட்டி மச்சுவா அருகே உள்ள ஒரு ஹோட்டலில் நேற்று இரவு 8:15 மணியளவில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் இந்த தீ விபத்து உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தனர். இதன்பேரில் 6 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன. விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதையும் படியுங்கள் : புது வீட்டிற்கு குடிபெயர்ந்த தம்பதி… அலமாரியில் கிடைத்த எச்சரிக்கை குறிப்பு… த்ரில்லர் படத்தை மிஞ்சும் சம்பவம்!
இன்று அதிகாலை 3.30 மணியளவில் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதை அடுத்து மீட்பு பணிகள் தொடங்கின. அப்போது 14 பேர் உயிரிழந்த நிலையிலும், 13 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர். உயிரிழந்தவர்களில் 11 ஆண்கள், ஒரு பெண் மற்றும் இரண்டு குழந்தைகள் அடங்குவர். அவர்களில் பெரும்பாலோர் மூச்சுத்திணறல் காரணமாக இறந்ததாக தீயணைப்பு படை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் மூவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.
இதில் காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் 12 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். மனோஜ் பாஸ்வாஸ் என்ற ஹோட்டல் ஊழியர் ஒருவர் மாடியிலிருந்து குதித்தில் உயிரிழந்தார். "விடுதி ஊழியர்களும் பலர் படிக்கட்டுகளில் ஏறி கூரை மற்றும் மேல் தள பால்கனிகளுக்குச் சென்றனர். அபபோது அறை மற்றும் தாழ்வாரங்களில் புகை நிரம்பியதில் பீதியடைந்த அவர் மாடியில் இருந்து குதித்தார்" என்று தீயணைப்புத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தீ விபத்துக்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை. அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி இந்த சம்பவம் குறித்து தொலைபேசியில் விசாரித்ததாக உள்ளூர் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்தனர். தீ விபத்து குறித்து கொல்கத்தா காவல் ஆணையர் மனோஜ் குமார் வர்மா கூறுகையில், "இந்த தீ விபத்து நேற்று இரவு நிகழ்ந்தது. இதுவரை 14 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் பலர் மீட்புக் குழுவினரால் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணைக்காக ஒரு சிறப்புக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.