பாகிஸ்தான் பெண்ணுடன் நடந்த திருமணம்... மறைத்த சி.ஆர்.பி.எப். வீரர்... அதிரடியாக பாய்ந்த நடவடிக்கை!
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த 22-ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உள்பட 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட இந்த பயங்கர தாக்குதல் இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
பதிலுக்கு பாகிஸ்தானும் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. மாறி மாறி எடுக்கப்படும் இந்த நடவடிக்கைகள் காரணமாக எல்லைப் பகுதிகளில் பதற்றம் நிலவி வருகிறது. பஹல்காம் போன்று இனியொரு தாக்குதல் நிகழாமல் தடுக்கும் நோக்கத்துடன் கடுமையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில், இந்திய வான்வெளியை பாகிஸ்தான் பயன்படுத்த முடியாத வகையில் அவற்றை இந்தியா மூடியது. பாகிஸ்தானியர்கள் இந்தியாவில் இருந்து வெளியேற மத்திய அரசு உத்தரவிட்டது. பாகிஸ்தானுடன் அனைத்து வகையான தபால் மற்றும் பார்சல் சேவையை நிறுத்தியுள்ளது. இதுபோன்ற கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், சி.ஆர்.பி.எப். வீரர் ஒருவரின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சி.ஆர்.பி.எப். வீரரான முனீர் அகமது, ஜம்மு காஷ்மீரில் பணியில் இருந்தார். அப்போது ஆன்லைன் மூலம் பாகிஸ்தானை சேர்ந்த மினல் கான் என்ற பெண் அவருக்கு அறிமுகமானார். நாளடைவில் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இதனையடுத்து, ஆன்லைன் மூலமாகவே கடந்த ஆண்டு மே மாதம் அவர்களது திருமணம் முறைப்படி நடந்தது. இந்திய விசாவுக்காக மினல் கான் நீண்ட நாள் காத்திருந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் சுற்றுலா விசாவில் அவர் இந்தியா வந்தார். அவரது விசா மார்ச் 22-ம் தேதியோடு காலாவதியானது. இருப்பினும் அவர் இந்தியாவில் இருந்தார்.
இந்த நிலையில், பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து அதனை மறைத்தற்காக முனீர் அகமது பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். விசா காலம் முடிந்தும் தெரிந்தே அவரை முனீர் அகமது மறைத்து வைத்திருக்கிறார். அவருடைய செயல்கள், பணிக்கான நடத்தையை மீறும் வகையில் இருப்பதாகவும், தேச பாதுகாப்புக்கும் தீங்கு விளைவிக்கும் வகையில் உள்ளதாகவும் சி.ஆர்.பி.எப். வெளியிட்ட அறிக்கை தெரிவித்துள்ளது.