சாமந்தி விதைகளுடன் கூடிய விசிட்டிங் கார்டு - இணையத்தில் வைரல்!
ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் சாமந்தி விதைகள் பதிக்கப்பட்ட விசிட்டிங் கார்டுகளை வைத்திருக்கிறார். இது இணையத்தில் வேகமாக பரவுகிறது.
மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரியான ஷுபம் குப்தா, நிலையான நெட்வொர்க்கிங்கிற்காக ஒரு புதுமையான முயற்சியை கையில் எடுத்துள்ளார். அதாவது அவர், சாமந்தி விதைகள் பதிக்கப்பட்ட விசிட்டிங் கார்டுகளை வைத்திருக்கிறார். அந்த அட்டையை தூக்கி எறிவதற்குப் பதிலாக, அதை மண்ணில் நட்டு வைத்தால் அது ஒரு சாமந்தி செடியாக வளரும். அந்தச் செடியில் அழகான சாமந்தி பூக்களும் கிடைக்கும்.
இந்த தகவலை அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் அவர், “இனிமேல் என் அலுவலகத்திற்கு வருபவர்களுக்கு இந்த அட்டை கிடைக்கும். இந்த அட்டையை நட்டு வைத்தால் அது சாமந்தி செடியாக வளரும்” என தெரிவித்துள்ளார். அதனுடன் சாமந்தி விதைகள் பதிக்கப்பட்ட அவரின் விசிட்டிங் கார்டின் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். அந்த அட்டையில், “இந்த அட்டையை நட்டால், சாமந்தி செடியாக வளரும்” என்ற வாசகம் உள்ளது.
ஷுபம் குப்தா இதனை ஜுன் 12 அன்று இணையத்தில் பகிர்ந்துள்ளார். இது இணையவாசிகள் பலரின் கவனத்தை ஈர்த்தது. நிலையான நெட்வொர்க்கிங்கிற்கான அவரது முயற்சியை பலரும் பாராட்டினர். ஐஏஎஸ் அதிகாரியின் முயற்சியை பராட்டி பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.