திருச்செந்தூர் | சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குவிந்த பக்தர்கள்... அரோகரா கோஷத்துடன் சுவாமி தரிசனம்!
மார்கழி மாதத்தை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்தனர்.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயில் தமிழகத்தின் மிகவும் பிரசித்தி பெற்ற தலமாக விளங்கி வருகிறது. இந்த கோயிலுக்கு தமிழ்நாடு மட்டுமில்லாமல் பல வெளி மாநிலங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் பக்தர்கள் மாலை அணிந்து 41 நாட்கள் விரதம் இருந்து பாத யாத்திரையாக இந்த கோயிலுக்க வந்து நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம்.
அந்த வகையில் நேற்று விருதுநகர், சிவகாசி, ராஜபாளையம், தென்காசி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மாலை அணிந்து வந்த ஏராளமான பக்தர்கள் திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயிலில் குவிந்தனர். கோயில் பிரகாரத்தில் பக்தர்கள் குழுக்களாக அமர்ந்து உற்சாகத்துடன் பக்தி பாடல்கள் பாடி பரவசம் அடைந்தனர். ஒரே நேரத்தில் குவிந்த பக்தர்களால் இரவு நேரத்திலும் கோயில் வளாகத்தில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது.